சீமான் கட்சிக்கு தடையா?… பரபரக்கும் தேர்தல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 9:17 pm
Naam
Quick Share

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் 6 பேரின் வீடுகளில் நடத்திய திடீர் சோதனை தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூ டியூபரான திருச்சி சாட்டை
துரைமுருகன், சென்னை இன்ஜினியர் பாலாஜி, கோவையை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் முருகன், தென்காசி மதிவாணன், சிவகங்கை விஷ்ணு பிரதாப் ஆகியோரின் வீடுகளில் NIA என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை இந்த மாதம் இரண்டாம் தேதி பல மணி நேரம் தீவிர சோதனையில் இறங்கியது.

ஏற்கனவே 2022ம் ஆண்டு மே மாதம் யூ டியூப் மூலம் நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் சேலம் செவ்வாய் பேட்டையைச் சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி என்னும் இருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர். முதலில் கியூ பிரிவு விசாரித்த இந்த வழக்கை பின்னர் தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துக் கொண்டது.

விசாரணையின்போது இந்த இரண்டு பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும், நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்துக்கு இணையான ஒரு அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் ஆயுதப் புரட்சியை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்தே NIA அதிகாரிகள் நாம் தமிழர் கட்சியின் ஆறு முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். இந்த 6 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் வருகிற ஐந்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல அக் கட்சியின் இளைஞர் அணி பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சோதனை குறித்து புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒரு மடிக்கணினி, ஏழு செல்போன் 8 சிம் கார்டுகள், 4 பென்டிரைவ்களும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்டவிரோத புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக தமிழகத்தில் மறைமுகமாக செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், சாராத முக்கிய நபர்கள் என பலருக்கு, சில வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் அனுப்பி வைக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உண்டு.

ஏனென்றால் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த உச்சகட்ட உள்நாட்டு போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் இன்றும் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். இதுபோன்றவர்கள் தமிழகத்தில் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பதையும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்கள்.

அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே பல வருடங்களாக தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். இதனாலும் அக்கட்சியின் நிர்வாகிகள் குறி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த அதிரடி சோதனையால் சீமான் கடுமையான அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவதை கேள்விப்பட்ட நேரத்தில் அவர் தனது கட்சி விழாவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கொந்தளித்த சீமான் “கட்சியில் நான் தான் பெரிய ரவுடி. ஆனால் தம்பிகள் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்” என்று காட்டமாக பொங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே, அரசு மற்றும் காவல் துறையின் ஒப்புதல் பெற்றுத்தான் நடத்தப்படுகிறது. சட்டத்துக்கு எதிராகவோ, சட்டம் – ஒழுங்கு சீர்கெடும் வகையிலான செயல்பாடுகளோ எதுவும் இல்லை.

திடீரென NIA அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் எங்களை அச்சுறுத்திப் பார்ப்பது போன்றதுதான். அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு நான் எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பணம் அனுப்புகிறோம் என்று இந்த சோதனையை நடத்துவதாக கூறுகிறார்கள். தற்போது அந்த இயக்கம் இருக்கிறதா?… தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தால் எல்லா கேள்விகளுக்கும் நானே பதில் கூறி இருப்பேன். ஆனால் ஐந்தாம் தேதி ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அன்று நானே நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்” என்றும் சீறினார்.

இதனிடையே இடும்பாவனம் கார்த்திக் தன்னை உடனடியாக ஆஜர் ஆகும்படி NIA அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனு விசாரணையின்போது, என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்,”மனுதாரர் 5-ம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், கைது நடவடிக்கை எதுவும் இருக்காது. சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம்” என்று
உறுதி அளித்தார். இதை கோர்ட் ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் இது தொடர்பாக கூறும்போது,”சீமான் கட்சியின் நிர்வாகிகள் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வளையத்துக்குள் கொத்தாக சிக்குவது இதுவே முதல் முறை என்பதால் அக்கட்சியினர் மிகுந்த பதற்றம் அடைந்துள்ளனர். அதுவும் தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பதால் தங்கள் கட்சியை இனி எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாமல் முடக்கி விடுவார்களோ என்ற அச்சமும் அவர்களுக்கு வருகிறது. அதனால்தான் தேர்தல் நேரத்தில் என்னை தூக்குவார்கள் என்று சீமானே கூறுகிறார்.

நமது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பொது மேடைகளில் புகழ்ந்தும்,பாராட்டியும் பேசுவதும் எப்போதுமே சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும்.

தேசிய புலனாய்வு முகமை, சம்மன் அனுப்பி இருப்பதால் அது முறைப்படியே தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

அதே நேரம் சம்மன் இல்லாமல் ஒருவர், தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக முடியுமா? அதையும் மீறிச் சென்றால் சீமானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்களா?… என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஒருவேளை, தமிழகத்தில் ஆயுதப் புரட்சிக்கு திட்டமிட்டதாக கூறப்படுபவர்களுடன் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 6 பேரும் உதவி செய்திருப்பதும் உறுதியானால் சீமான் கட்சிக்கு சிக்கல்தான்” என்கின்றனர்.

NIA விரித்துள்ள வலையில் சீமான் கட்சி சிக்குமா?…தப்புமா?… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 264

0

0