பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு : செப்.,17ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என அறிவிப்பு

26 August 2020, 5:43 pm
kp anbalagan- updatenews360
Quick Share

சென்னை : பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பொறியியல் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களிடம், கடந்த ஜுலை 5ம் தேதி முதல் ஆக.,16ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரையில், 1,60,834 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1,31,436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய மாணவர்களும் விண்ணப்ப கட்டணம் செலுத்த நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1,31,436 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் முடிவுகள் வரும் செப்.,8ம் தேதி வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, செப்.,17ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

கடந்த ஆண்டு 480 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு 458 கல்லூரிகளில் 1,61,867 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது. அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும். புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு தேவையான அம்சங்களை மட்டுமே ஏற்போம். புதிய கல்விக் கொள்கையின் இலக்குகளை தமிழகத்தில் உயர்கல்வித்துறை ஏற்கனவே அடைந்து விட்டது, எனக் கூறினார்.

Views: - 36

0

0