ஊழல் செய்ததாக டெல்லியில் துணை முதலமைச்சர் கைது.. திமுகவுக்கு ஏன் இந்த பதற்றம் : அண்ணாமலை கேள்வி!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 5:55 pm
Quick Share

சென்னை : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் கைதுக்கு கண்டனம் தெரிவித்த திமுகவுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- டெல்லியில்‌ ஆம்‌ ஆத்மி அரசு, நவம்பர்‌ 21, 2021 ஆம்‌ ஆண்டு கொண்டு வந்த புதிய மதுபானக்‌ கொள்கை முறைகேடுகள்‌ காரணமாக, டெல்லி துணை முதலமைச்சர்‌ மனிஷ்‌ சிசோடியா, சிபிஐயால்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌. டெல்லியில்‌ ஆம்‌ ஆத்மி கட்சி ஆட்சிப்‌ பொறுப்புக்கு வந்த பிறகு, 2021 ஆம்‌ ஆண்டு நவம்பரில்‌ புதிய மதுபானக்‌ கொள்கையை அறிமுகம்‌ செய்தது.

இதன்‌ அடிப்படையில்‌ 800-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ நிறுவனங்களுக்கு மதுபானம்‌ விற்க உரிமம்‌ வழங்கப்பட்டது. இந்த நிலையில்‌, டெல்லி அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ நரேஷ்‌ குமார்‌ ஐஏஎஸ்‌, புதிய மதுபானக்‌ கொள்கை குறித்து, டெல்லி முதலமைச்சர்‌ அரவிந்த்‌ கெஜ்ரிவால்‌, டெல்லி நகர மேயர்‌ மற்றும்‌ டெல்லி துணை நிலை ஆளுநர்‌ ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்‌.

இந்த அறிக்கையை மையமாக வைத்து, புதிய மதுபானக்‌ கொள்கையைப்‌ பற்றி விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்‌ துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர்‌ ஆணையிட்டார்‌. லஞ்ச ஒழிப்புத்‌ துறையின்‌ அறிக்கையின்‌ சாராம்சம்‌ பின்வருமாறு :- மதுபான சில்லறை விற்பனை உரிமம்‌ பெற்றவர்கள்‌, டெல்லி கலால்‌ விதிகள்‌ 2010ஐ மீறி பல்வேறு வழிகளில்‌ மதுபான விளம்பரம்‌ செய்துள்ளனர்‌. இந்த விதிமீறலுக்கு அபராத நடவடிக்கை எடுக்க அரசு மதுபான சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள்‌, அவர்கள்‌ பலன்‌ பெறும்‌ வகையில்‌, வழங்கப்பட்ட கால அளவை விட கூடுதல்‌ நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கட்டணம்‌ வசூலிக்காமல்‌, உரிமக்‌ காலத்தை நீட்டித்ததால்‌, அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, கொரோனா கட்டுப்பாடுகளை காரணம்‌ காட்டி, ஜனவரி 2022ல்‌ ரூ.144.36 கோடி மதிப்பிலான மது விற்பனை உரிமக்‌ கட்டணங்கள்‌ தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிஷ்‌ சிசோடியா, விதிமுறைகளை மீறி, பல தனியார்‌ நிறுவனங்களுக்கு மது விற்பனை உரிமங்களைக்‌ கொடுத்தாகவும்‌, அதன்‌ பிரதிபலனாக, கோவா மற்றும்‌ பஞ்சாப்‌ மாநிலத்‌ தேர்தல்‌ செலவுக்கு, பல நூறு கோடி ரூபாய்கள்‌ அந்தத்‌ தனியார்‌ நிறுவனங்களிடம்‌ இருந்து ஆம்‌ ஆத்மி கட்சி பெற்றதாகவும்‌, அரசுக்கு சுமார்‌ 2800 கோடி ரூபாய்‌ அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும்‌ என்றும்‌ தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையை அடிப்படையாகக்‌ கொண்டு, சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணையைத்‌ தொடங்கியது.

விசாரணையில்‌ கிடைத்த பல்வேறு ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌, டெல்லி துணை முதலமைச்சர்‌ மனிஷ்‌ சிசோடியா உள்ளிட்ட 15 பேர்‌ மீது சிபிஐ வழக்குப்‌ பதிவு செய்து, அவர்‌ உள்ளிட்ட பலரது வீடுகளில்‌ சோதனை நடத்தப்பட்டது. 9 தொழிலதிபர்கள்‌ மற்றும்‌ 2 மதுபான ஆலைகள்‌ மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து 9 பேரைக்‌ கைது செய்தனர்‌. அவர்களிடம்‌ நடத்தப்பட்ட விசாரணையின்‌ அடிப்படையில்‌
இரண்டு குற்றப்பத்திரிக்கைகள்‌ தாக்கல்‌ செய்யப்பட்டன.

இந்த குற்றப்‌ பத்திரிகைகளில்‌ புதிய மதுபான கொள்கை முறைகேட்டில்‌ ஆம்‌ஆத்மி மூத்த தலைவர்கள்‌ மற்றும்‌ தெலுங்கானா முதல்வர்‌ சந்திரசேகரராவ்‌ அவர்களது மகளும்,‌ தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான திருமதி கவிதா அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள்‌ சம்மன்‌ அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்‌. கடந்த 23ஆம்‌ தேதி டெல்லி முதல்வர்‌ கெஜ்ரிவாலின்‌ உதவியாளர்‌ பிபவ்‌
குமாரிடமும்‌ சிபிஐ அதிகாரிகள்‌ விசாரணை மேற்கொண்டனர்‌.

இந்த நிலையில்‌ தான்‌, துணை முதல்வர்‌ மனிஷ்‌ சிசோடியாவை சிபிஐ 8 மணி நேர விசாரணைக்குப்‌ பிறகு கைது செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌, திரு மனிஷ்‌ சிசோடியா காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகம்‌ வந்தார்‌. அவரிடம்‌ 8 மணி நேரம்‌ விசாரணை நடத்தப்பட்டது. மனிஷ்‌ சிசோடியா அளித்த பதில்‌ திருப்திகரமாக இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும்‌ இல்லை என்றும்‌, ஆதாரங்களைக்‌ காட்டி கேள்வி எழுப்பப்பட்ட போதும், மழுப்பலான பதில்களை அளிப்பதால்‌, காவலில்‌ எடுத்து விசாரிப்பது அவசியம்‌ என்று அவர்‌ கைது செய்யப்பட்டிருக்கிறார்‌ என்று தெரிவித்துள்ளனர்‌. இது விசாரணை அமைப்புகளின்‌ பொதுவான நடைமுறையே.

டெல்லி அரசின்‌ புதிய மதுபானக்‌ கொள்கையில்‌ இத்தனை முறைகேடுகள்‌ நடந்திருக்க, மனிஷ்‌ சிசோடியா கைதை, ஜனநாயக விரோதம்‌, சட்ட விரோதம்‌ என்று விமர்சித்திருக்கிறார்‌ திமுக எம்பி டிஆர்‌ பாலு. எப்போதெல்லாம்‌ நம்‌ நாட்டில்‌ ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படுகிறதோ, உடனடியாக, திமுகவினருக்கு, அவர்கள்‌ கட்சியின்‌ தலைவர்கள்‌, அமைச்சர்கள்‌, வாரிசுகள்‌ மேல்‌ இருக்கும்‌ ஊழல்‌
வழக்குகளும்‌, அமலாக்கத்துறை வழக்குகளும்‌ ஞாபகத்துக்கு வந்து, மூக்கு வியர்க்கும்‌.

மடியில்‌ கனம்‌ இருந்தால்‌ வழியில்‌ பயம்‌ இருப்பதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றும்‌ இல்லையே. திமுக அமைச்சர்களும்‌, எம்பிக்களும்‌ அமலாக்கத்‌ துறை விசாரணைக்குப்‌ போய்‌ வந்து கொண்டு இருப்பது பொதுமக்களுக்கு வேண்டுமானால்‌ தெரியாமல்‌ இருக்கலாம்‌. டிஆர்‌ பாலுவுக்குத்‌ தெரியாமல்‌ இருக்குமா? நாளை அவரது கட்சியிலும்‌ யாராவது கைதாகும்‌ நிலை வந்தால்‌, மற்ற கட்சிகளின்‌ ஆதரவு வேண்டுமே என்று பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்‌.

திமுக அரசையோ, முதலமைச்சரையோ சமூக வலைத்தளங்களில்‌ விமர்சித்தாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும்‌ திமுகவுக்கு, ஜனநாயகத்தைப்‌ பற்றி எல்லாம்‌ பேசத்‌ தகுதி இருக்கிறதா? ஆட்சிக்கு வந்ததும்‌, முந்தைய அதிமுக அரசின்‌ அமைச்சர்கள்‌ மேல்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறையை ஏவி விட்டதெல்லாம்‌ மக்கள்‌ மறந்து விடவில்லை.

மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌ ஆட்சியில்‌, விசாரணை அமைப்புகள்‌, சுதந்திரமாகவும்‌, முழு அதிகாரத்துடனும்‌ செயல்பட்டு வருகின்றன. குற்றம்‌ செய்தவர்கள்‌, நீதிமன்றத்தில்‌ தகுந்த ஆதாரங்களுடன்‌ குற்றம்‌ நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெறுவதை நாம்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. அது தொடரும்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 310

0

0