திமுக கூட்டணியில் பாமக…? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்..!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 6:07 pm
Quick Share

கூட்டணிக்கு ஆர்வம்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் இப்போதே பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகின்றன.

மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் அப்படியே அள்ளி விடவேண்டும் என்று இந்த கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருவதும் வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இரண்டாம் நிலை கட்சியாகவும், அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய இடம்பெறும் என்பதும் நிச்சயம்.

ஆனால் இந்த கட்சிகளுக்கு இணையான தேர்தல் ஆர்வத்தையும், சுறுசுறுப்பையும் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இப்போதே காட்டத் தொடங்கி இருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனிக்குரல்

அதுவும் விசிக தனது குரலை தனி ஆவர்த்தனம் வாசிப்பது போல ஒலிக்க தொடங்கி இருப்பதுதான் இதில் ஆச்சரியம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை திணிப்பதால்தான் மத்திய பாஜக அரசை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று தொடர்ந்து திருமாவளவன் கூறி வருவதால் அவருடைய கட்சி ஒருபோதும் பாஜக இடம்பெறும் அணியில் இருக்காது என்பது உறுதி.

Thirumavalavan - Udpatenews360

இந்த நிலையில்தான், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக கூறி திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரடியாகவும், ஆணித்தரமாகவும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தனது கட்சியின் ஒரு நிலைப்பாட்டை அவர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகிய தலைவர்களின் முன்பாகவே அவர் இதைப் போட்டும் உடைத்திருக்கிறார்.

எச்சரிக்கை

திருமாவளவன் பேசும்போது, “தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின்போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போல தமிழகத்திலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வன்முறையை தூண்ட ஆர்எஸ்எஸ் திட்டமிடும். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

CM Stalin - Updatenews360

திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் தமிழக காவல்துறை இருக்க வேண்டும். எங்களுக்கு அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக., பாமக இருக்கும்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

விசிக தலைவரின் இந்த அதிரடி பேச்சு திமுக தலைமைக்கு ஒரு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏனென்றால் 2024 தேர்தலில் எப்படியும் டாக்டர் ராமதாஸின் பாமகவை தனது அணியில் கொண்டு வரும் தீவிர முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. பாமக வந்து விட்டால் கூட்டணி இன்னும் வலுவடையும். தமிழகத்தில் 39 தொகுதிகளையும் மிக எளிதில் கைப்பற்றி விடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது. ஆனால் அதற்கு வேட்டு வைப்பது போல பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவன் தடாலடியாக அறிவித்து இருக்கிறார்.

எதிர்ப்பு அரசியல்

“திருமாவளவன் இப்படி அடித்து பேசி இருப்பதால் பாமகவை ஒரு போதும் திமுக கூட்டணியில் விசிக அனுமதிக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறவும் தயங்காது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்குள் வருவதை மனதார ஏற்றுக்கொள்ளும் திருமாவளவன், பாமகவை வேப்பங்காய் போல நினைத்து ஒதுக்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஏனென்றால் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராகத்தான் கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக
விசிக அரசியலே நடத்தி வருகிறது. இரு கட்சிகளின் தொண்டர்களும் எதிரும் புதிருமாகத்தான் உள்ளனர்.

Ramadoss - thirumavalavan - updatenews360

மேலும் தேர்தலுக்காக இரு கட்சிகளும் ஒரே அணியில் இருந்தால் தொண்டர்கள்
ஒருங்கிணைந்து செயல்பட மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் பாமகவை ஆதரித்து பிரசாரம் செய்ய நேர்ந்தால் பட்டியலின மக்களின் ஆதரவை முழுமையாக, தான் இழக்க நேரிடும் என்று திருமாவளவன் அஞ்சுகிறார்.

திமுக கூட்டணிக்குள் வந்தால் பாமக குறைந்தபட்சம் நான்கு தொகுதிகளிலாவது போட்டியிடும். அந்த தொகுதிகளில் பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவேண்டிய இக்கட்டான நிலையும் அவருக்கு ஏற்படும். அதேபோல பாமகவின் வருகையால் திமுக கூட்டணியில் தற்போது தனக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் குறைந்து போய்விடலாம் என்றும் திருமாவளவன் கருதுகிறார். அதனால்தான் எங்களுக்கு அரசியல் ரீதியாக எந்த பின்னடைவு ஏற்பட்டாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தைரியமாகவும் கூறுகிறார். பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்ததன் பின்னணி இதுதான்!

அப்படி வெளியேறும் சூழல் உருவானால் சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ்சும், சசிகலாவும் இணைந்து தொடங்க இருப்பதாக கூறப்படும் புதிய கட்சி, நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலையும்,
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் திருமாவளவன் துணிந்து சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

அதேநேரம் தமிழக காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறுவதுதான் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இதனால் வேறு யாரோ தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் அவருடைய அடி மனதில் எழுந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அதனால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என்ற மறைமுக குற்றச்சாட்டையும் திமுக அரசின் மீது திருமாவளவன் வைத்திருக்கிறாரோ
என்று கருதவும் தோன்றுகிறது” என அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ திமுக கூட்டணியில் திருமாவளவன் பெரும் அதிர்வலையையும் சலசலப்பையும் ஏற்படுத்திவிட்டு இருக்கிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

Views: - 335

0

0