இது கொஞ்சம் கூட நல்லா இல்ல… தமிழ்த்தாய் விவகாரம் ; தமிழக அரசை கடிந்து கொண்ட அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 10:54 am
Quick Share

பிரதமர் மோடி பங்கேற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் பாட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் மேற்கத்திய இசை வடிவில் 90 வினாடிகள் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் திமுகவின் மற்றொரு முயற்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.

விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாகியிருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும், எனக் கூறினார்.

Views: - 176

0

0