பயத்தில் அஞ்சி நடுங்கும் அமைச்சர்கள்… 2024 தான் திமுகவுக்கு கடைசி… அண்ணாமலை ஆவேசப் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 12:03 pm
annamalai----updatenews360
Quick Share

வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை கொண்டு வந்து கொங்கு பகுதியை அழிக்கப் புறப்பட்ட சாராய அமைச்சர் தற்போது புழல் சிறையில் உள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, அவர் பேசியதாவது :- ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த யாத்திரையானது ஜனவரி 13ஆம் தேதி சென்னை வரை செல்கின்றது. 234 தொகுதிகளிலே 60வது தொகுதியாக இன்று காங்கேயம் வந்திருக்கின்றேன்.

செல்லுகின்ற எல்லா இடத்திலும் கூட இளைஞர்கள், தாய்மார்கள், மகளிர்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் கனவு காண்கின்ற தமிழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தர முடியாது என்பது உறுதியாக தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுகவும், இந்தியாவில் ஆட்சி புரியும் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியும் முற்றிலும் வேறுபட்டது.

ஒரு பக்கம் லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு ஆட்சி, கடுகு அளவு கூட நம் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை இல்லாத ஒரு ஆட்சி. இன்னொரு பக்கம் 29 மாதத்திற்கு ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு புதிய ஊழல் குற்றச்சாட்டு திமுக மீது பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது போல, தமிழகத்தை சுரண்டி கொண்டிருப்பது போல, திமுகவை அப்புறப்படுத்த வேண்டிய காலமும் கூட 2024ல் வருகின்றது.

சகோதர, சகோதரிகளே ஜல்லிக்கட்டுக்கு காளைகளை வளர்த்துகின்றீர்களே, மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என திமுக தேர்தல் வாக்குறுதியில் 373 வது தீர்மானமாக சொல்லி இருந்தார்கள். இந்தப் பகுதியில் திமுக வருகின்ற பொழுது நீங்கள் கேட்க வேண்டும். வீர விளையாட்டு என்ன ஜல்லிக்கட்டை இன்று நடத்துகின்றோம் என்றால், அதற்கு முழு காரணமும் நம்மளுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. இதற்கு தடை போட்டவர்கள் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் ஜெயராம் ரமேஷ் என்ற சுற்றுச்சூழல் அமைச்சர் ஜல்லிக்கட்டு என்பது காட்டுமிராண்டித்தனம் எனக் கூறினார். அதனால் அதை தடை செய்தார்கள்.

தேங்காய் பருப்பு மற்றும் எண்ணெய்க்கு 5% ஜிஎஸ்டி கொண்டு வந்த தமிழகத்தில் எதற்கு 1% செஸ் வரி விசித்திரமாக இருக்கிறது. நிச்சயமாக இதற்கு பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தை கையில் எடுக்கும். குறிப்பாக, காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறி, நெசவாளர் பெருமக்கள் இருக்கிறார்கள். திமுக உடைய தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு அமைத்து தருவோம் என சொன்னார்கள்.

இதுவரை ஒரு செங்கல்லை கூட வைக்கவில்லை. விசைத்தறி நெசவாளர்களிடம்  இருந்து பள்ளி சீருடை கொள்முதல் செய்வோம் என்று சொன்னார்கள். அதற்கும் ஆர்ப்பாட்டம் பண்ணி அதையும் செய்யவில்லை. நூல் கொள்முதல் நிலையம் அமைப்போம் என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. மிக முக்கியமான காங்கேயம், சென்னிமலை பகுதியில் பிரச்சனைகளை தேர்தல் வாக்குறுதியில் திமுக கொடுத்திருந்தனர். அதை நிறைவேற்ற வில்லை.

எந்த அமைச்சர் பெருமக்களும் கூட அடுத்த கோர்ட், கேசில் மாட்டி விடுவோமோ என்ற பயத்திலேயே நடுங்கீட்டு இருக்காங்க. கொங்கு பகுதியில் வாக்குக்கு பணம் கொடுத்து அந்த கலாச்சாரத்தை கொண்டு வந்த முக்கியமாக கொங்கு பகுதியை அழிக்கப் புறப்பட்ட சாராய அமைச்சர் தற்போது புழல் சிறையில் உள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் வரும்பொழுது கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற உண்மைக்கு ஏற்ப கொங்கு பகுதியில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் அனுப்பி வைப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

தற்போது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளார். 23 ஆண்டுகளாக கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் திமுகவினர். பெண்கள் அரசியலுக்கு வந்தால் தூய்மை அடையும் என பாரதப் பிரதமர் நம்புகின்றார், என்றார். பின்னர் காங்கேயத்திலிருந்து புறப்பட்டு தாராபுரம் சென்றார்.

Views: - 120

0

0