2ஜி FILE-ல் இன்னும் 9 டேப் இருக்கு… அதுக்கப்புறம் டிஆர் பாலுவின் அரசியல் வாழ்க்கை ஓவர்… நாள் குறித்த அண்ணாமலை!

Author: Babu Lakshmanan
8 February 2024, 11:33 am
Quick Share

2ஜி பைல் விவகாரத்தில் 9வது டேப் வெளியாகும் போது திமுக எம்பி டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வருகின்ற 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகள் தேசிய செயற்குழு நடக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடந்த 6 மாதங்களாக செய்து வரும் பணிகள் குறித்து பேசப்பட்டது.

தமிழகத்தில் பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 21 சதவீதம் வாக்குகளை வாங்குவதாக கணிப்புகள் வருகின்றன. கட்சி முன்னேறி இருக்கிறது. கட்சி தொண்டர்கள் தங்களுடைய வேலைகளை அமைதியாக செய்து வருகின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரிவதில்லை. மக்கள் பா.ஜ.க..நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டனர். 2024ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தான் வெற்றி பெற போகிறார்.

189 தொகுதிகளை யாத்திரை கடந்து விட்டது. கூட்டணியை பொறுத்தவரை வண்டியை குதிரை இழுக்க வேண்டும். குதிரையை வண்டி இழுக்க முடியாது. இது பா.ஜ.க.வை பலப்படுத்தி கொள்ள வேண்டிய நேரம். கூட்டணி வண்டி மாதிரி. கூட்டணி கட்சிகள் பா.ஜ.க. இழுக்கும் என நினைக்க கூடாது. பா.ஜ.க. வளர்ந்து உள்ளது. முழுமையாக 4 வாரங்கள் உள்ளன. மார்ச் மாதம் வரலாம். ஒவ்வொரு கட்சியும் கூட்டம் போட்டு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்கள்.

கட்சியை பலப்படுத்த முழு மூச்சாக உயிரை தந்து இறங்கி உள்ளோம். கூட்டணி உருவாகி அமைந்து விடும். கூட்டணி கட்சிகளும் தெளிவாக இருக்கிறார்கள். வலிமையான நாடு வேண்டும். அற்புதமான தமிழ்நாடு வேண்டும். முதலமைச்சர் மீது 70 சதவீதம் அதிருப்தி இருக்கிறது என எல்லா கருத்து கணிப்புகள் கூறுகிறது. இதன் வெளிப்பாடு பாராளுமன்ற தேர்தலில் தெரியவரும். கூட்டணி பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

திமுக கூட்டணி இருந்து என்ன பிரயோஜனம். தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கிட உள்ளார்களா…? கூட்டணியில் கட்சிகள் இருப்பதால் பிரச்சனை அல்ல. பா.ஜ.க. கூட்டணி பற்றி கவலைப்பட வில்லை. 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாக அமைந்து விடும்.

சென்னை மாநகரத்தில் பா.ஜ.க.வால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். நீட்டை எதிர்த்து திமுக பேரணி சென்றது. தலைவர்கள் பிறந்த நாளுக்காக ஊர்வலமாக செல்லும் போது போக்குவரத்து பாதிப்பை உருவாக்கும். பா.ஜ.க. கட்சிக்கு ஒரு நியாயம். மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயம் இருக்க கூடாது. 200வது தொகுதிக்கு ஜே.பி. நட்டா வருகிறார். 234வது தொகுதிக்கு பிரதமர் வர இருக்கிற தேதி அறிவிக்கப்படும். சென்னையில் யாத்திரை செல்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

பிற கட்சிகள் குறித்து பேச விரும்ப வில்லை. பா.ஜ.க. வளர வேண்டிய நேரம். அடுத்தவர் வீட்டில் அமர்ந்து கொண்டு டீ, காபி போட சொல்ல உரிமை இல்லை. விருந்தினராக போகலாம். ஆனால் அடுத்தவர் வீட்டிற்கு உரிமையாளராக போக முடியாது. மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க பாடுபடுகிறோம். மக்களிடத்தில் வரக்கூடிய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. வரலாறு காணாத வகையில் 2024ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. எம்.பிக்களை பெறும். அடுத்த கட்சி பற்றி குறை சொல்வதில்லை.

முதலமைச்சருக்கு இந்தி தெரியுமா…? இந்தி தெரியாது என கூறுபவர் ஸ்பெயினுக்கு போய் இந்தி கற்று கொண்டாரா…? பிரதமர் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில் இந்தியில் பேசியதை முதலமைச்சர் கேட்டு வந்து பேசி உள்ளார். பா.ஜ.க. ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பாரத பிரதமர் மோடி கண்ணோட்டம் குறித்து பேசி உள்ளார்.

ஸ்பெயினுக்கு ரூ.3440 கோடி முதலீடு கொண்டு வர முதலமைச்சர் செல்ல வேண்டுமா…? உ.பி.யில் இருந்து 5 அதிகாரிகள் தமிழகம் வந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சென்றார்கள். துபாய் சென்று ரூ.6 ஆயிரம் கோடி வந்ததாக கூறி 2 ஆண்டுகளில் ஒரு ரூபாய் வந்ததா…? இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்து வருவதால் ஏற்கனவே முதலீடு செய்து உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்து உள்ளன. தமிழக மக்கள் பா.ஜ.க. விற்கு மிகப்பெரிய வெற்றியை தர உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணிக்கான கதவுகள், ஜன்னல்கள் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்று கொள்ள வேண்டும். இது பற்றி டெல்லியில் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கும் போது இது போன்ற பேச்சுகள் வரும்.

பாராளுமன்ற அவையில் மந்திரியை மோசமான வார்த்தையில் பேசுவது. பல இடத்தில் திமுக மூத்த தலைவர்களின் ஜாதி வன்மம் வெளி வருகிறது. அரசியல் சாமானிய மக்களை நோக்கி செல்வதை டி.ஆர். பாலு புரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுக்கு இன்னும் 2 டேப் உள்ளது. பேசிவிட்டு தப்பி செல்ல முடியாது. டி.ஆர்.பாலு பேசியது ஆணவத்தின் உச்சம். வயது வேறு, ஆற்றல், திறமை வேறு.

டி.ஆர்.பாலு வயதினால் பெரிய அரசியல்வாதி என நினைத்தால் தவறு. இந்தியாவின் தேசிய பறவையாக மயில் வைத்து உள்ளோம். காக்கா நிறைய இருக்கிறது என்பதால் அதை வைக்கவில்லை. டி.ஆர்.பாலு எதை வேண்டுமானாலும் பேசினால் அண்ணாமலையோ பா.ஜ.க.வோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் அல்ல. வருகின்ற 2ஜி பைல் 9 டேப் முடிந்த பின் டி.ஆர். பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 159

0

0