உங்க மகனின் முட்டாள்தனமான செயல்… இளம் மாணவர்களின் மனதில் தற்கொலையை தூண்டுவதா..? திமுக மீது அண்ணாமலை கோபம்..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 5:16 pm
Quick Share

அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக திமுக எம்எல்ஏ கையெழுத்து வாங்கிய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நுழைவுத் தேர்வை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்தே, பெரும்பாலான ஓட்டுக்களை அள்ளியது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வை திமுக ரத்து செய்யவில்லை. இதனால், எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு திமுக ஆளாகியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாகக் கூறியதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

தற்போது, நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்கான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்வது, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை திமுக தற்போது பள்ளிகளில் கொண்டு சேர்த்துள்ளது. பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொண்டு, அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

எந்த அழைப்பும் இல்லாமல் அரசுப் பள்ளிக்கு சென்ற திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா, நாளைய மருத்துவர்களான மாணவர்களிடம் நீட் தேர்வு தற்கொலைக்கு தூண்டுவதாக விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார். இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைக்கிறது..?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களுக்காக பணம் பெறுவதை நீட் தேர்வு தடுப்பதால், அதனை திமுகவினர் தடுக்கின்றனர். அண்மையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக எம்பியின் மருத்துவக் கல்லூரியில் போலி ரசீது மூலம் 400 கோடி ரொக்கப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திமுக இந்த கேவலமான அரசியலை நிறுத்திவிட்டு, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, தகுதிக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 342

0

0