இனி ஜெயில்ல உணவே ‘ஓசி’ தான்… திராவிட மாடலுக்கு கிடைத்த சம்மட்டி அடி ; அமைச்சர் பொன்முடி குறித்து பாஜக விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 4:28 pm
Quick Share

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பிறகு, பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்றது. அனைத்து கட்ட வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கின் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விபரங்களை டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், தற்போது மற்றொரு திமுக அமைச்சரும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருப்பது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது. தமிழகத்தின் உய‌ர் கல்வி துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இது நாள் வரை கோலோச்சிக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை கொள்ளையடித்து கொண்டிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு திராவிட மாடலுக்கு கிடைத்த சம்மட்டி அடி.

மக்கள் பணத்தில் மாளிகை கட்ட நினைத்தால், சிறைச்சாலைக்கு தான் செல்ல வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தொடர்ந்து ஏழை,எளிய மக்களை கிண்டல், கேலி செய்து வந்தவரை இந்த தீர்ப்பு மாற்ற வேண்டும். ‘ஓசி, ஓசி’ பஸ்ல போறீங்க என சொன்னவருக்கு இனி சிறையில் வழங்கும் உணவே ‘ஓசி’ தான் என்று நினைத்து பார்க்கட்டும். ஊழல்வாதிகள் ஒழியட்டும். நேர்மையாளர்கள் நிமிரட்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 248

0

0