நியாயப்படுத்த பாக்காதீங்க… மிகப்பெரிய போராட்டம் : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 4:22 pm
Anbumani - Updatenews360
Quick Share

நியாயப்படுத்த பாக்காதீங்க… மிகப்பெரிய போராட்டம் : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சவால்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எட்டாவது முறையாக அந்த அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு மறுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. சில பிரிவுகளுக்கு 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டம் நடத்தின. ஆனால், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, கடந்த ஜூலை மாதம் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை 2.18% நேரடியாக உயர்த்திய தமிழக அரசு, நிலையான கட்டணம், காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை உச்ச மின் பயன்பாட்டு நேரக்கட்டணம் என பல வழிகளில் மறைமுகமாகவும் உயர்த்தியுள்ளது.

அதை எதிர்த்து இதுவரை 7 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், எட்டாவது கட்டமாக வரும் 27 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைச் சாலைகளில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தமிழக அரசு அறிவித்துள்ள யூனிட்டுக்கு ரூ.1.15 மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள தொழில் நிறுவனங்கள், நிலைக்கட்டண உயர்வு, உச்ச மின் பயன்பாட்டு நேரக் கட்டணம், சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான கட்டணம் ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

நிலைக்கட்டணம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மறைமுக மின்சாரக் கட்டண உயர்வை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 112 கிலோவாட் மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றன.

அவற்றுக்கு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35 வீதம் ரூ.3920 மட்டுமே மாத நிலைக்கட்டணமாக அவை செலுத்தி வந்தன. ஆனால், நிலைக்கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.153 வீதம் மாதத்திற்கு ரூ.17,136 (ஆண்டுக்கு ரூ.2,22,768) வசூலிக்கப்படுகிறது. இது 430% உயர்வு ஆகும். நிலைக்கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டதை எந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தாலும் தாங்கிக் கொள்ள முடியாது.

அடுத்ததாக, காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை உச்ச மின் பயன்பாட்டு நேரக் கட்டணமாக 25% கூடுதல் கட்டணம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் போராட்டத்திற்குப் பிறகு 15% ஆகவும், இப்போது குறிப்பிட்ட நேரத்திற்கான மின்சார பயன்பாட்டைக் கணக்கிடும் கருவி பொருத்தப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால், அதை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என கூட்டமைப்பு கோருகிறது. மூன்றாவதாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவற்றின் வளாகத்தில் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்திற்காக ரூ.1.53 வீதம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அதில் 50 விழுக்காட்டை குறைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கூட்டமைப்பின் கோரிக்கை. தமிழ்நாடு அரசு அறிவித்த நேரடியான மற்றும் மறைமுகமான மின்கட்டண உயர்வைத் தாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர். தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்து விட்டது. ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாத தமிழக அரசு, மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்பதை மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தவே முடியாது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதுவரை 7 முறை போராட்டம் நடத்தி, இப்போது எட்டாவது முறையாக போராட்டம் நடத்துகின்றன என்பதிலிருந்தே நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.

இதை வழக்கமான போராட்டமாக அரசு பார்க்கக்கூடாது. அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தாங்க முடியாத மின்கட்டண உயர்வால் அழிவின் விளிம்புக்கே சென்று விட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களைக் காப்பாற்றக் கோரி விடுக்கும் அபயக்குரலாகவே இதை அரசு பார்க்க வேண்டும்.

10 லட்சம் தொழில்துறையினர் மற்றும் ஒரு கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கலாக இந்த கோரிக்கையை தமிழக அரசு பார்க்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வரும் 27&ஆம் நாள் நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. பா.ம.க.வினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

அதேநேரத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் மனிதச்சங்கிலி போராட்டத்தை தமிழக அரசு கைவிடச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 340

0

0