தமிழ் பெண்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்யும் திமுக அரசு… இதை உணர்ந்தால் அமைச்சர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.. பாஜக பிரமுகர் வேதனை!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 5:42 pm

தமிழகத்தில் மதுவிற்பனையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது பெண்களுக்கு செய்யும் துரோகம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று ஒரு கூட்டத்தில் பேசும்போது, பெண்களுக்கு ரூபாய் 1000 கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். ‘சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்’ அம்மாவுக்கும் ஆயிரம், பெண்ணுக்கும் ஆயிரம் என ரூபாய் 2000 கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான் என்றும், மற்றொரு அமைச்சர் பொன்முடி அவர்கள் “ஓசி, ஓசி பஸ்ஸில் போறீங்க” என பெண்களை கிண்டல் செய்தும் ஏளனமாக பேசியுள்ளார்கள்.

மேலும், இலவச பேருந்தில் செல்லும் பெண்களை மரியாதைக்குறைவாக நடத்துனர்கள் பேசும் வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ, திமுகவினர் அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு பணம் கொடுப்பது போன்று இந்த அரசியல் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உண்மையிலேயே தமிழ் பெண்கள் மீது அக்கறை இருந்தால், அரசே மதுவை விற்கும் அவலத்தை நிறுத்த வேண்டும். தி மு கவின் மகளிரணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ‘மதுவின் கொடுமையால் தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளனர்’ என்று கூறியது திமுகவினரின் செவிகளுக்கு சென்று சேரவில்லையா? தமிழக அரசின் வருவாயில் பெரும் விழுக்காடு மதுவை நம்பியே உள்ளது என்பதை மறுக்க முடியுமா?

பெண்களுக்கு 2000 கொடுப்பதாக சொல்லும் தமிழக அரசு, தரமற்ற மதுவின் கொடுமையால் அதே பெண்களின் குடும்பத்தில் தந்தை, கணவர், சகோதரர்கள் உடல் நலம் குன்றி பணியாற்ற முடியாமல், வருவாய் இழந்து, வட்டிக்கு கடன் வாங்கி வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கின்ற சோகத்தை திராவிட முன்னேற்ற கழக அரசு உணர்ந்திருந்தால் மூத்த அமைச்சர்கள் இப்படி பேச துணிய மாட்டார்கள்.

டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பது, பார்களை அதிகரிப்பது, மேலும் பல்வேறு மதுக்கூடங்களுக்கு அனுமதியளிப்பது என்று அந்த தொழிலை மேலும் விரிவுபடுத்த திமுக அரசு முனைந்து வருவது கண்கூடு.

சென்னையில் நடைபெறும் சாலை பணிகள், மழை நீர் வடிகால்வாய் பணிகள் உட்பட அனைத்து பணிகளிலும் வெளி மாநில தொழிலாளர்களே ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்கள் படித்து பட்டதாரிகளாகி செல்வந்தர்களாகி விட்டார்கள். அதனால் தான் இந்த பணிகளுக்கு செல்வதில்லை என்ற வாதத்தை ஆளும் கட்சியினர் முன் வைப்பார்களேயானால், செல்வந்தர்களுக்கு ஏன் ரூபாய் 1000 கொடுக்கிறீர்கள்? ஏன் இலவசங்கள், ஏன் கடன் தள்ளுபடிகள்? என்பதே நம் கேள்வியாக இருக்கும்.

மதுவினால் பெண்கள் படும் துயரத்தை சொல்லி மாளாது என்பது தெரிந்தும், மது விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவது தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம். இவை எல்லாவற்றிற்கும் மேல், மூத்த அமைச்சர்கள் ‘ஓசி, ஓசி’ என்றும், ‘சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்’ என்றும் மக்களை ஏளனம் செய்வது மிக பெரிய கொடுமை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!