களத்தில் குதித்த மாயாவதி… திண்டாட்டத்தில் திருமா…? நிறைவேறாமல் போகிறதா மறைமுக ஆசை..?

Author: Babu Lakshmanan
29 September 2022, 4:58 pm
Quick Share

போட்டியில் திமுக

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் சந்திரசேகர ராவ், நிதிஷ் குமார் என நான்கு முதலமைச்சர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். இந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயரும் இருப்பதாக தேசிய அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு பேச்சும் உள்ளது.

Stalin - Updatenews360

அது உண்மையாக இருக்கலாம் என்பதை கூறும் விதமாகத்தான், திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே சிறந்த வழிகாட்டியாக உள்ளது என்று அவ்வப்போது ஸ்டாலின் பேசியும் வருகிறார் என்பது வெளிப்படை.

காங்கிரஸ் நம்பிக்கை

ஆனால் தங்களது தலைமையில்தான் 2024 தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை மிக உறுதியாக உள்ளது. அதற்காகத்தான் ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்டும் வருகிறார்.

Rahul T Shirt - Updatenews360

மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கடைசி நேரத்தில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டு காங்கிரஸ் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று சோனியாவும், ராகுலும் நம்புகிறார்கள்.

ஒருங்கிணைப்பு முயற்சி

அதேநேரம் மத்திய பாஜக அரசை தேர்தலில் வலுவாக எதிர்கொள்ள அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மம்தா, சந்திரசேகர ராவ், நிதிஷ் குமார் போன்றவர்கள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாவை, பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் இருவரும் ஒன்றாக சென்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சோனியாவை நிதிஷ்குமார் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்து சோனியாவிடம் அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த சந்திப்பின்போது வேறு என்னவெல்லாம் பேசப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

அதேநேரம் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட நிதிஷ்குமார்தான் பொருத்தமானவர், அத்தனை எதிர்க்கட்சிகளும் அவரை ஆதரித்தால் மோடிக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியுமென்று சோனியாவிடம் லாலு பிரசாத் விளக்கி கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு சோனியா எந்த பதிலும் சொல்லவில்லை என்கிறார்கள்.

இதற்கிடையே அரியானா மாநிலம் பகேதாபாத் நகரில், மறைந்த துணைப்பிரதமர் தேவிலாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மூவரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம், நிதிஷ்குமாரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 2024 தேர்தலில் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாகவே தோன்றுகிறது.

மாயாவதி

இந்த நிலையில்தான் ராகுல், மம்தா, கெஜ்ரிவால் சந்திரசேகரராவ், நிதிஷ்குமார், ஸ்டாலின் போன்றோருடன் யாருமே எதிர்பாராத வகையில், இன்னொரு பிரபல தலைவரும் பிரதமர் வேட்பாளர் போட்டிக் களத்தில் குதித்திருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல. உ.பி. முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதிதான்.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி கூறும்போது, “மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தயார். எதிர்க்கட்சிகள் மரியாதைக்குரிய வகையில் எங்கள் கட்சியை அணுகி, அவர்களின் செயல்திட்டங்களை எங்கள் தலைவர் மாயாவதியிடம் தெரிவித்தால், கூட்டணி வைப்பது குறித்து அவர் இறுதி முடிவெடுப்பார்” என்று குறிப்பிட்டார்.

இதனால் மாயாவதியும் பிரதமர் பதவி மீது ஒரு கண் வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

எனினும் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக இருப்பது சமாஜ்வாடி தான். இதனால் அதன் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டணிக்கான சாத்தியம் குறித்து எதுவும் பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் தரம்வீர் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பியதற்கு, “அகிலேஷ் யாதவை விட மாயாவதி மிகப் பெரிய தலைவர். உத்தரபிரதேசத்தில் நான்கு முறை முதலமைச்சராக இருந்துள்ளார். அகிலேஷ் ஒரு முறை மட்டுமே பதவி வகித்துள்ளார். மாயாவதி பெரிய மனப்பான்மை கொண்டவர், மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பவர். திறந்த மனதுடன் அகிலேஷ், மாயாவதியை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவரை நாங்கள் வரவேற்போம்” என்று தெரிவித்தார்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. பட்டியல் இன மக்களுக்காக நடத்தப்படும் கட்சி என்பதால் மத்திய பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, இமாசலப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் அக்கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் 4 முதல் 7 சதவீத வாக்குகள் பல தேர்தல்களில் பகுஜன் சமாஜ்க்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் எம்எல்ஏக்கள் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் பார்த்தால் காங்கிரசுக்கு அடுத்து நாட்டிலேயே தங்களது கட்சிதான் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கருதுகிறது. இதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தங்கள் தலைவர் மாயாவதியை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.

அதற்காக பல்வேறு மாநிலங்களில் பட்டியல் இன மற்றும் பழங்குடியின
மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக கூறப்படும் இந்திய குடியரசு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மறைமுகப் பேச்சு வார்த்தையில் பகுஜன் சமாஜ் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படித் திடீரென்று மாயாவதி தன் பக்கம் வாருங்கள் என்று மாநிலக் கட்சிகளுக்கும் சிறுசிறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருப்பதற்கு காரணம் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்முவை பாஜக நிறுத்தியபோது, அக்கட்சியை பகிரங்கமாக எதிர்த்த தலைவர்கள் கூட முர்முவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

எங்கே மக்கள் தங்களை பழங்குடியினருக்கு எதிராக நாம் இருக்கிறோமோ என்று தப்புக்கணக்கு போட்டு விடுவார்களோ என பயந்து பாஜக நிறுத்திய முர்முவை அவர்கள் ஆதரிக்கவும் செய்தனர். இதனால் முர்மு அபார வெற்றியும் கண்டார்.

இதை மனதில் வைத்துதான் பிரதமர் வேட்பாளராக பட்டியல் இனத்தைச் சேர்ந்த தன்னை எதிர்க்கட்சிகள் அறிவித்தால் வெற்றி உறுதி என்று மாயாவதி கருதுகிறார்.

முர்மு பழங்குடியின வகுப்பு பெண் என்றாலும் கூட அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்திய கட்சி பாஜக என்பதால் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தபோது, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக முர்மு எதுவும் செய்யவில்லை என்று ஒரு காரணத்தைக் கூறி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவருக்கு ஆதரவாக வாக்களிக்காமல் காங்கிரஸ் நிறுத்திய பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்குத்தான் ஓட்டு போட்டது.

ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு பொதுவேட்பாளராக போட்டியிட்டால் விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியை ஆதரிக்கும் நிலைக்கு தானாக வந்து விடுவார் என்பதால்தான் அவரிடம் முன்கூட்டியே மாயாவதி கட்சியின் தலைவர்கள் ஆதரவு கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

திண்டாடும் திருமாவளவன்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஒரு வருடமாக கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, தன்னை பிரபலப்படுத்தி கொண்டுவரும் திருமாவளவனுக்கும் தேசிய அளவில் ஒரு பெரிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என்ற மறைமுக ஆசை இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள். ஆனால் திமுக கூட்டணியில் இருப்பதால் அதை வெளிப்படையாக அவரால் சொல்ல முடியவில்லையாம். அதேநேரம் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலினோ அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ நிறுத்தப்பட்டால் இவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைதான் திருமாவளவனுக்கு ஏற்படும்.

அதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைவதற்கு முன்பாக, அதுவும் இப்போதே ஒரு முடிவுக்கு வர இயலாது என்று திருமாவளவன் தரப்பில் மாயாவதி கட்சியின் தலைவர்களிடம் பதில் தரப்பட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால், மாயாவதி கட்சியின் அழைப்பால் ஒரு குழப்பமான, திண்டாட்ட நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டிருக்கிறார், என்றே சொல்லவேண்டும்.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு, கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று திருமாவளவன் புகழ்ந்து பேசியதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அந்த விவகாரமே அவரை இன்னும் நெருடிக் கொண்டிருக்கும்போது மாயாவதி கட்சி ஆதரவு கேட்டது வெளியே தெரிந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று கருதி விசிக தலைவர் மறுத்து இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

எனவே மாயாவதி கட்சியின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பதை இப்போதே கூற முடியாது.

தவிர அவருடைய கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கூறுவதைப் பார்த்தால் பகுஜன் சமாஜ் ஆதரவு இல்லாமல் மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்று மிரட்டுவது போல உள்ளது. அதனால் மாயாவதியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிரதான கட்சிகளும், சிறுசிறு கட்சிகளும் ஆதரவு கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்!

Views: - 371

0

0