இது கடைந்தெடுத்த பொய்… அமைச்சர் பொன்முடிக்கு பொய் செல்வதே வேலையாகிடுச்சு ; பாஜக ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 3:52 pm
Quick Share

குஜராத்தில் முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பதாகக் கூறிய அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி அண்மையில் மீண்டும் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மறுபடியும் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தனித்தீர்மானத்தின் மீது அனைத்து எம்எல்ஏக்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்குத் தான் உண்டு என்று 1998ம் ஆண்டு இதே சபையில் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது தீர்மான கொண்டு வந்தார். ஆனால், இப்போது வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது, என்று கூறினார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
மேற்கு வங்கத்தில் இருக்க கூடிய மத்திய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரே இந்திய நாட்டினுடைய பிரதமராக இருப்பவர் தான் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய பல்ககலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு வழிவகுக்குற சட்டம் இதற்கு வழி வகுக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.

குஜராத்திலும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் தான் இருப்பதாகவும், அவர் பரிந்துரை செய்பவர்கள்தான் அவர்கள் தான் துணைவேந்தர் என்ற சட்டங்களும் இருப்பதாகக் கூறினார். அந்த அடிப்படையில் தான் இதனை வலியுறுத்துவதாகவும், முதலமைச்சர் வேந்தராக இருக்கும்பட்சத்தில், அனைத்தும் உண்மையாக நடைபெறும் என்று கூறினார்.

அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “குஜராத்தில் முதலமைச்சர்தான் வேந்தராக இருக்கிறார்” – அமைச்சர் பொன்முடி. கடைந்தெடுத்த பொய். உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்ந்து பொய் சொல்வதே வழக்கமாகி விட்டது. குஜராத்தின் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் அம்மாநிலத்தின் ஆளுநரே வேந்தர், எனக் கூறினார்.

Views: - 207

0

0