பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி… மத்திய அரசு போட்ட 15 நிபந்தனைகள் ; மகிழ்ச்சியில் அண்ணா அறிவாலயம்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 8:39 am
Quick Share

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி, வயது முதிர்வு காரணமாக காலமானார். மெரினாவில் உள்ள கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு சார்பில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அதேவேளையில் நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அதில், நினைவு சின்னம் அமைக்க பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது.

அதாவது, பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

Views: - 382

0

0