அண்ணாமலைக்கு காத்திருக்கும் சவால்கள்?…. அதிரடி காட்டுவாரா?…அடக்கி வாசிப்பாரா?….

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 9:23 pm
DNf- Updatenews360
Quick Share

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்த பின்பு, தமிழக அரசியல் களமே முற்றிலுமாக மாறிவிட்டது. அதுவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று கட்சியின் மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜேபி நட்டா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து விட்டு திரும்பிய பின்பு இன்னும் பரபரப்பு எகிறியுள்ளது.

இபிஎஸ் அறிவிப்பு

ஏனென்றால் கூட்டணி முடிவு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவிக்காத நிலையில் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது நிஜம்.

ஆனால் அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறோம். கூட்டணியில் இருந்து கொண்டே எங்களது முன்னோடி தலைவர்களான அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவமதிக்கும் விதமாக மாநில பாஜக தலைமை கடுமையாக விமர்சித்ததை எந்தவொரு தொண்டனும் விரும்பவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது என்ற தெளிவான விளக்கத்தை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் நேரடியாக தெரிவித்த பின்பே தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி சேரும் விருப்பத்தை ஓரங்கட்டினர்.

அண்ணாமலைக்கு போட்ட கண்டிஷன்

இதற்கு இடையேதான், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம் செய்யப்படமாட்டார், அதற்குரிய சூழலே எழவில்லை என்று டெல்லி பாஜக மேலிடம் வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அவருக்கு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக மறைந்த தலைவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம் என்ற அறிவுரை அண்ணாமலைக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக இப்படி திடுதிப்பென்று வெளியேறிவிடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பல மாநிலங்களில், கூட்டணி கட்சிகளுடன் இருப்பது போன்ற லேசான உரசல், முட்டல் மோதல்கள்தான் உள்ளன. அவற்றை ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து முடிந்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்து விட்டதாக தெரிகிறது.

திரைமறைவில் அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை

அதேநேரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ள ஒரு மாநில கட்சியை சரி வர மதிக்காமல் நடந்து கொண்டதன் மூலம் பாஜக தனது ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்ட பிறகுதான் டெல்லி பாஜக மேலிடமே கூட்டணி முறிவின் வீரியத்தை புரிந்து கொண்டது.

அதனால்தான் அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளும் திரை மறைவில் நடந்தன. ஆனால் காலம் கடந்து போய்விட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்தப் பிரச்சாரத்தை பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே பி நட்டா போன்ற தலைவர்கள் எளிதில் சமாளித்து விடுவார்கள் என்பது நிச்சயம்.

அண்ணாமலைக்க காத்திருக்கும் சவால்கள்

அதேநேரம் அண்ணாமலைக்கு பல்வேறு சவால்களும் வரிசை கட்டி நிற்கின்றன. அதை அவர் சமாளிப்பாரா அல்லது மீண்டும் தனது பாணியில் அதிரடி காட்டுவாரா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த உடனேயே தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 2019 தேர்தலில் இடம் பெற்றிருந்த பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் போன்றவை அண்ணாமலையின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கட்சித் தலைவர்களில் யாரும் வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் கூட்டணியில் அதிமுக இருந்தால் வெற்றி வாய்ப்பு கூடும் என்ற நம்பிக்கை இந்த கட்சிகளிடம் இருப்பதுதான். மேலும் கடந்த சில வாரங்களாக வெளியாகி வரும் தேசிய செய்தி ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 287 முதல் 317 இடங்கள் வரை வென்று மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்பது தெரிய வருகிறது.

பாஜக வியூகத்தால் கூட்டணி கட்சிகள் குழப்பம்

அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு முன்பாக தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி 28 சதவீத வாக்குகளுடன் நான்கு முதல் 9 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அந்த கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது.

எனினும் திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக குறைந்தபட்சம் 15 இடங்கள் வரை வென்று விட முடியும் என்ற நம்பிக்கை பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றிடம் இருந்தது.

ஆனால் அண்ணாமலையோ தமிழக பாஜக 25 சதவீத ஓட்டுகளுடன் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுகிறார். அப்படியென்றால் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு வங்கி வெறும் மூன்று சதவீதம் தானா?…என்ற கேள்வி இந்தக் கட்சிகளிடமும் புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றிடமும் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கான விடையை அண்ணாமலை கூற வேண்டிய கட்டாயம்தான் அவருக்கு எழுந்துள்ள மிகப்பெரியதொரு சவால் ஆகும்.

சபரீசன் – ஓபிஎஸ் சந்திப்பு : ஏற்றுக் கொள்கிறதா பாஜக?

அதேநேரம் அண்ணாவையும் ஜெயலலிதாவையும் தேவையின்றி கடுமையாக விமர்சித்து விட்டு அவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள் என்று கூறிக் கொள்ளும் டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் மட்டும் பாஜகவின் கூட்டணிக்குள் கொண்டுவர நேர்மையான, ஊழலற்ற அரசை தமிழகத்தில் அமைக்க விரும்பும் அண்ணாமலை எதற்காக தீவிரம் காட்டுகிறார் என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

மேலும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், மகன் உதயநிதியும் 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டு அதை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டின்படி பார்த்தால் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சபரீசன் முறைகேடாக பணம் சம்பாதித்து உள்ளதாக தெரிகிறது. அப்படிப்பட்ட சபரீசனை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஓ பன்னீர்செல்வம் மைதான கேலரியில் உள்ள அவருடைய அறைக்கே சென்று தனிப்பட்ட முறையில் 15 நிமிடம் பேசியதை அண்ணாமலை ஏற்றுக் கொள்கிறாரா?… அப்படியென்றால் ஊழல் செய்ததாக கூறப்படுபவரை சந்தித்து பேசுவதும் கூட ஊழலை ஆதரிப்பாகத்தானே அர்த்தம்?…

டிடிவி மீது ஏன் இந்த கரிசனம்?

அதேபோல 25 ஆண்டுகளுக்கு முன்பு அன்னிய செலவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விதித்த 28 கோடி ரூபாய் அபராத தொகையை இன்றுவரை கட்டாமல் இழுத்தடித்து வரும் டிடிவி தினகரனையும் எதற்காக பாஜக கூட்டணியில் சேர்க்க அவர் விரும்புகிறார்?

இந்த இருவர் மீதுமட்டும் ஏன் இந்த கரிசனம்? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார்.

இதனால்தான் மறைந்த தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா போன்றோர் குறித்து விமர்சித்து பேச வேண்டாம் என்று டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு அறிவுரை கூறியிருக்கிறதோ, என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் மீண்டும் இந்த தலைவர்களை பற்றி பேசப் போய் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் அமைக்கவிருக்கும் கூட்டணிக்கும் பாதகம் வந்துடக்கூடாது என்ற கவலையில் இப்படி கூறியிருக்க வாய்ப்பு உண்டு.

சமாளிப்பாரா அண்ணாமலை?

மேலும் தமிழகத்தில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களில் சிலர் அண்ணாமலை அரசியலில் காட்டும் அதிரடி தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்காது. மாநிலத்தில் படிப்படியாக பாஜக வளர்வதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. அதுதான் கட்சி ஆழமாக வேரூன்றுவதற்கும் அடிப்படையாக அமையும் என்ற எண்ணத்தில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இவர்கள்தான் மாநிலத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பாஜகவின் மேலிடத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்றும் விடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய நெருக்கடியும் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. இதையும் அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

“பாஜகவுக்கு மட்டும் 25% ஓட்டுகள் கிடைக்கும் என்று அண்ணாமலை கூறுவதற்கு சில காரணங்களும் உண்டு. ஆனால் அது எந்த அளவிற்கு தேர்தலில் கை கொடுக்கும் என்பதை திட்டவட்டமாக கூற இயலாது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அண்ணாமலையின் ஓட்டு கணக்கு

“அண்ணாமலையின் நம்பிக்கையின்படி ஒரு எளிய தேர்தல் ஓட்டு கணக்கை இங்கே பார்ப்போம்.

தமிழகத்தில் தற்போது சுமார் 6 கோடி 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 78 சதவீதம் பேர் ஓட்டு போடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் 5 கோடி வாக்குகள் வரை பதிவாகி இருக்கும்.

மொத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தோராயமாக பார்த்தால் 36 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 2 கோடியே 60 லட்சம் பேர் வரை இருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் எல்லா அரசியல் கட்சிகளிலும் உறுப்பினர்களாகவோ அல்லது அந்தக் கட்சிகளின் அனுதாபிகளாகவோ இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

தேர்தலின்போது இந்த இளைய தலைமுறையினரிலும் 78% பேர் வாக்களித்தால் சுமார் 2 கோடி ஓட்டுகள் பதிவாகி இருக்கும்.

இதில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 50 லட்சம் ஓட்டுகள் பாஜகவுக்கு கிடைத்தாலே பெரிய விஷயம். எஞ்சிய மூன்று கோடி ஓட்டுகளில் 15 சதவீதம் கிடைத்தால் அதன் மூலம் 45 லட்சம் வாக்கு கூடுதலாக சேரும்.

இப்படி அதிக பட்சமாக 95 லட்சம் ஓட்டுகள் வரை பாஜக தனித்துப் போட்டியிட்டால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள்தான் உண்டு. இதுவும் கூட மிக மிக அதிகப்படியான கணிப்புதான்.

திமுகவிற்கு இணையாக தமிழக பாஜகவில் மிகப்பெரிய தொழில்நுட்ப பிரிவு அணியை வைத்திருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு இந்த கணக்கெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அதிரடி அரசியலை தொடர்வாரா?

தனது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து 25 சதவீத ஓட்டுகளை பாஜக பெற்றுவிடும். அதன் மூலம் 25 எம்பி தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என்று அவர் நம்பிக்கை கொள்வதிலும் எந்த தவறும் இல்லை.

அதேநேரம் 1980ல் குமரி அனந்தன் காந்தி காமராஜ் தேசிய காங்கிரசை தொடங்கிய போதும், 1994ல் வைகோ மதிமுகவை ஆரம்பித்தபோதும் பின்னர் 2013-ல் அவருடைய மதுவிலக்கு நடை பயணத்தின் போதும், 2005-ல் நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை துவக்கிய போதும் காணப்பட்ட எழுச்சிக்கு இணையானதொரு வரவேற்பு அண்ணாமலைக்கு கிடைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். நாட்டை ஆட்சி செய்யும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற முறையிலும் அவருடைய சாதுர்ய பேச்சாற்றல் காரணமாகவும் இவர்கள் மூவருக்கும் கிடைத்ததை விட ஓரிரு சதவீத ஓட்டுகள் வேண்டுமானால் கூடுதலாக கிடைக்கலாம்.

ஆனால் பாஜகவுக்கு மட்டும் 25 சதவீத ஓட்டு, 25 எம் பி சீட்டுகளில் வெற்றி என்பதெல்லாம் நடக்குமா என்றால் அது கேள்விக்குறியான ஒன்றுதான். இந்த கணக்குகளை எல்லாம் மீறி தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கூட இடம் பிடிக்க தக்க சாதனையாகவும் அமைந்து விடும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அது நிச்சயம் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூட சொல்லலாம்” என அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அண்ணாமலை அதிரடி அரசியலைத் தொடர்வாரா?… அல்லது அடக்கி வாசித்து திமுக, அதிமுகவை வீழ்த்தி சாதிக்க நினைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 328

0

0