சென்னையை நெருங்கும் மிக்ஜம் புயல்… புரட்டியெடுக்கும் கனமழை… விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து…!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 8:40 am
Quick Share

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து ரயில் மற்றும் விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை வந்த 8 விமானங்கள் பெங்களூரூவுக்கு திருப்பிவிடப்பட்டன.
வானிலை சீரான பிறகு விமானங்கள் மீண்டும் சென்னை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டியவை என மொத்தம் 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல, சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவதாகவும், ஒரு மணிநேரத்திற்கு ஒரு பயணிகள் ரயில் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 232

0

0