போலீசார் செய்த வதையால் இளைஞர் உயிரிழப்பு… வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமா., வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
23 April 2022, 2:56 pm
Quick Share

சென்னையில் போலீஸார் துன்புறுத்தலால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு விசிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார், கடந்த 19ம் தேதி இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அந்த சமயம், போலீசார் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளனர். மேலும், அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓடவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கத்தியும், கஞ்சாப் பொட்டலமும் இருந்ததாம். இதையடுத்து, பிடிபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(28) ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், மறுநாள் காலையில் விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரை போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எதிர்பார்க்காதவிதமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை என்ற பெயரில் போலீஸார் விக்னேஷை அடித்துக் கொன்றுவிட்டதாக விக்னேஷின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, விக்னேஷ் மர்மமரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல்நிலைய கஸ்டடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையை போலீசார் மூடிமறைப்பதாகவும், அரசியல் கட்சிகளை திசைதிருப்பவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, உண்மை நிலை அறிந்து, இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,சென்னையில் போலீஸார் துன்புறுத்தலால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு விசிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னை-பட்டினப்பாக்கம் இளைஞர் விக்னேஷ் காவல்துறையினரின் விசாரணை வதையால் பலியாகியிருக்கிறார். அவருடன் குரூர வதைக்குள்ளான சுரேஷ் என்பவர் சிகிச்சை அளிக்கப்படாமல் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Views: - 520

0

0