வேதா நிலையம் ‘நினைவு இல்லமாக’ மாற்றம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..!!

28 January 2021, 11:39 am
vedha illam open - updatenews360
Quick Share

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அவரது இல்லம் அமைந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் அரசு சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

ஜெ. வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவரது வீடு முழுதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. அவர் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உட்பட அனைத்து புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் பூஜை பொருட்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. போயஸ் இல்லத்தை அரசு வசம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக்கும், வீட்டுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து தீபக் சகோதரி தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், ‘சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடக்கூடாது’ என உத்தரவு பிறப்பித்தது. பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடக்கூடாது என்ற உத்தரவிற்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, ஜெ. நினைவு இல்லத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர், முதலமைச்சரும், சபாநாயகர், அமைச்சர்கள் அனைவரும் அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வெண்கலச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Views: - 0

0

0