திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!

Author: Babu Lakshmanan
7 மே 2024, 8:56 மணி
Quick Share

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சில நேரம் சீரியஸாக அரசியல் பேசுகிறாரா?…அல்லது சிரிப்பதற்காக பேசுகிறாரா?… என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கும்.

அதேபோலத்தான் மதிமுகவின் 31ம் ஆண்டு விழாவில் அவர் பேசும்போது திமுகவுடன் மதிமுக ஒருபோதும் இணையாது என்று ஆவேசமாக குறிப்பிட்டதையும் கருதத் தோன்றுகிறது.

ஏனென்றால் திமுகவுடன் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக, திமுகவின் சின்னத்திலேயே களமிறங்கி வெற்றியும் கண்டது. 2021தமிழக தேர்தலில் மீண்டும் அதே கூட்டணியில் மதிமுக போட்டியிட்டபோது 6 தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஒதுக்கினார். அதுவும்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டதால்தான் அந்தத் தொகுதிகளும் கூட வைகோவுக்கு கிடைத்தது.

மேலும் படிக்க: கழுத்தில் இறுக்கப்பட்ட கம்பி… ஜெயக்குமார் தனசிங் திட்டமிட்டே கொலை… பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்..!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணியில் 2021தேர்தலில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கும் திமுக தலைமை தலா ஆறு தொகுதிகளையே ஒதுக்கியது. இந்த கட்சிகள் மூன்றுமே தங்களது சின்னத்தில்தான் போட்டியிட்டன. அதேநேரம் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்கள் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் மிக உறுதியாக இருந்து அறிவாலயத்திற்கு கடும் அதிர்ச்சியும் அளித்தது.

தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்டும் தலா இரண்டு தொகுதிகளில்தான் வென்றன. மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றி கண்டது.

2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி உருவாக காரணமாக திகழ்ந்த வைகோ கோவில்பட்டியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் களமிறங்காமல் ஒதுங்கிக் கொண்டபோதே அவர் மீதான நம்பகத்தன்மையை மதிமுக தொண்டர்கள் படிப்படியாக இழக்க ஆரம்பித்தனர். முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி திமுகவில் இணையத் தொடங்கினர். 2019, 2021 தேர்தல்களில் திமுக சின்னத்திலேயே போட்டியிட்டதால் மேலும் பலர் விலகினர்.

கடந்த ஆண்டு மே மாத வாக்கில் மதிமுகவில் அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் “சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கட்சி உறுப்பினர்கள், தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளது. மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக உங்களது உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவதுதான் சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது”
என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் திருப்பூர் துரைசாமி கூறிய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று வைகோ மறுக்கத்தான் செய்தாரே தவிர அதை முழுமையாக புரிந்து கொண்டது போல தெரியவில்லை.

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் கட்சியின் சின்னமான பம்பரத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் மதிமுக எதிர்பார்த்த இரண்டு தொகுதிகள் கிடைக்கவே இல்லை. திருச்சி தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கியது. அங்கும் கூட கடைசி நேரத்தில் பம்பரம் சின்னம் கிடைக்காமல் தீப்பெட்டி சின்னத்தில்தான் துரை வைகோ போட்டியிடுகிறார். இதனால் அவருடைய தொகுதியில் இழுபறி நிலைமையே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான் மதிமுகவின் 31வது ஆண்டு விழாவில் பேசிய வைகோ திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மதிமுக ஒரு போதும் திமுகவுடன் இணைக்கப்பட மாட்டாது.முதலில் குடை, பிறகு பம்பரம், இப்போது தீப்பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள் மதிமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும். அந்த அளவுக்கு கட்சி வலிமை பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், “இந்த 31ஆண்டுகளிலும் பலரால் முதுகில் குத்தப்பட்டேன். திமுகவுடன் மதிமுக இணைக்கப்படும் என்ற விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அது நடக்காது. இருப்பினும், 2026 தமிழக தேர்தலிலும் திமுக வெற்றிபெற மதிமுக உதவும்.
அரசியல் களத்தில் திமுக முன்னேறிச் செல்வதற்கான அத்தனை தடைகளையும் களைந்து அதற்கு உறுதுணையாக மதிமுக இருக்கும். நம் முயற்சியில் வெற்றி பெறுவோம். திமுக அரசின் நலனைக் காக்க மதிமுக என்றென்றும் துணை நிற்கும். திமுக கூட்டணியில் இருந்து எங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது” என்று அவர் ஓங்கி ஒலித்திருக்கிறார்.

வைகோ இப்படி பேசி இருப்பதிலிருந்தே அவருடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் மதிமுகவை திமுகவுடன் இணைக்கவேண்டும் என்ற குரல்கள் வெளிப்படையாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் பல உண்டு.

1993-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை கட்சியின் தலைமைக்கு கொண்டு வருவதற்காக வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என்று பகிரங்கமாக வைகோ குற்றம் சாட்டினார். அதனால்தான் திமுகவிலிருந்தே அவர் நீக்கவும் பட்டார். ஆனால் 2017க்கு பிறகு வைகோ தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார்.

வைகோ குறித்து மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுவது என்ன?…

2018ல் கருணாநிதியின் மறைவுக்கு பின்பு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை வைகோ மனுதார ஏற்றுக்கொண்டார். அவரை தமிழக முதலமைச்சராக்குவேன் என்று சபதமும் எடுத்தார். அதை
2021 தேர்தலில் நிறைவேற்றியும் காட்டினார்.

அதாவது யாரை எதிர்த்து வைகோ மதிமுகவை தொடங்கினாரோ அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக ஆறு தொண்டர்கள் தீக்குளித்து மரணத்தையும் தழுவினர். அது இன்றுவரை ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பாக மதிமுகவுக்கு உள்ளது.

1990களில் கருணாநிதியை அனுசரித்து சென்று இருந்தால் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டிருக்கும் நிலையே உருவாகி இருக்காது. அவரும் கட்சியில் துரைமுருகன் போல முன்னணி தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருப்பார் என்பது நிச்சயம்.

இதனால் வைகோவை நம்பி அவர் பின்னால் சென்ற ஏராளமான திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கடந்த 30 ஆண்டுகளில் சொத்து சுகங்களை இழந்ததுதான் மிச்சம். அவர்கள் திமுகவிலேயே நீடித்திருந்தால் எம் எல் ஏ, எம் பி, அமைச்சர்கள் என்று உயர்நிலையை அடைந்திருக்கும் வாய்ப்புகளும் உண்டு. அந்த மனநிலை தனது கட்சி நிர்வாகிகளிடம் தற்போது வலுவாக எழுந்து இருப்பதால்தான் அதை மறைப்பதற்காக திமுகவுடன் மதிமுக ஒருபோதும் இணைக்கப்பட மாட்டாது என்று வைகோ கூறியிருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.

அதைவிட வேடிக்கை 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம், ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர்த்துவோம் என்றும் வைகோ சபதம் எடுக்கிறார். இதையும் கூட அவருடைய மகன் துரை வைகோவை மனதில் வைத்தே கூறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

இப்படியே போனால் மதிமுகவில், வைகோவும் அவருடைய மகனும் தான் மிஞ்சுவார்கள். யாரை வாரிசு அரசியல் என்று கடுமையாக வைகோ விமர்சித்தாரோ அவரிடம் வைகோ எப்போதோ சரணாகதி ஆகிவிட்டதையும் காண முடிகிறது.

இனி ஒரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் கூட திமுகவின் உதவி இல்லாமல் அது நடக்காது என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. எனவே வைகோ தனது கட்சி தொண்டர்களை தொடர்ந்து குழப்பாமலும், வீம்பு பிடிக்காமலும் மதிமுகவை, திமுகவுடன் இணைப்பதற்கு இதுவே சரியான தருணம். ஏனென்றால் வைகோவையோ, அவருடைய மகனையோ நம்பி அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து செல்ல மதிமுகவில் யாருக்குமே விருப்பம் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதை வைகோவும், அவருடைய மகன் துரை வைகோவும் புரிந்து கொண்டால் சரிதான்!

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 207

    0

    0