இனியாவது அமைச்சர்கள் மீது சாட்டையை சுழற்றுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்.. உத்தரவுக்கு கட்டுப்படுவார்களா திமுகவினர்…?

Author: Babu Lakshmanan
10 October 2022, 7:20 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, போதைப் பொருள் நடமாட்டம், ஒரு டஜனுக்கும் மேலான லாக்கப் மரணங்கள், அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு போன்றவை காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தலைவலி

இன்னொரு பக்கம், மூத்த அமைச்சர்களான துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், இளைய அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சிவசங்கர் போன்றோர் கடந்த மார்ச் மாதம் முதலே சர்ச்சையை உருவாக்கும் விதமாக ஏதாவது பேசி வருவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் பொது மக்களை வெளிப்படையாக மிரட்டுவதும்
திமுக தலைமைக்கு கடும் தலைவலியை கொடுக்கிறது.

rajakannappan - updatenews360

அதிலும் குறிப்பாக, அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தனது இலாகாவை சேர்ந்த உயரதிகாரி ஒருவரை சாதியின் பெயரை சொல்லித் திட்டியதாக கூறப்பட்டதும், குறவர் சமூக பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியனை நிற்க வைத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஒருமையில் பேசியதாக செய்தி வெளியானதும், மிக அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்களின் இலவச பஸ் பயணத்தை கேலி செய்யும் விதமாக ஓசியிலதானே போறீங்க என்று கிண்டலாக கூறியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்துக்கள் குறித்து சர்ச்சை

அதேபோல திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா எம்பி இந்துக்களை மிக இழிவுபடுத்தி பேசியதும் நாடு முழுவதும் இந்துக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

A Raja 1 - Updatenews360

அதுமட்டுமின்றி அனைத்து ஊடகங்களிலும், இது பற்றிய செய்திகள் வெளியாகி
மக்களிடம் திமுக மீது ஒரு எதிர்மறை தோற்றத்தை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை

இதனால் நிலைமை மோசமாவதை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

“எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். தவறுகளோ குறைகளோ கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன்” என்றும் கூறி இருந்தார்.

CM Stalin - Updatenews360

ஆனால் முதலமைச்சராகவும், கட்சியின் தலைவராகவும் ஸ்டாலின் சொன்னதை திமுகவினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவருடைய எச்சரிக்கையையும் மீறி பொதுவெளியில் அக்கட்சியினர் நடந்து கொண்ட விதம், பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில்தான் அக்டோபர் 9ம் தேதி சென்னையில் கூடிய திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதை வெளிப்படையாக போட்டு உடைத்ததுடன், அது தொடர்பாக தனது வேதனையையும் கொட்டித் தீர்த்தார்.

வருத்தம்

அவர் பேசும்போது, “இனி தமிழகத்தை திமுகதான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்! நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும்.

தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.
திமுக, பழுத்த மரமாக இருப்பதால் மட்டும் தான் கல் எறிகிறார்கள்.

ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது?

CM Stalin - Updatenews360

நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்.

பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறையின் காரணமாக திமுக பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது.

தவிர, நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேச வேண்டும்.

நிர்வாகிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நானே நேரடியாக கண்காணிப்பேன்.
எந்த பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான் அந்த பொறுப்பு நிலைத்து நிற்கும் என்பதை கவனமாக வைத்து கொள்ளுங்கள்” என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

திமுகவுக்கு அவப்பெயர்

“அத்துமீறி நடந்து கொண்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது அவர் இப்படி தனது கட்சிக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக பேசவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கடந்த ஜூலை மாதம் நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, “சட்ட விதிகளின்படி நடந்து கொள்ளாவிட்டால் யார் தவறு செய்தாலும் அவர்களை சும்மா விடமாட்டேன், சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றுவேன்” என்று தனது கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் திமுக நகராட்சி, ஊராட்சி பிரதிநிதிகள் பலர் தொடர்ந்து சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்ளத்தான் செய்தனர். இது பொதுமக்களிடம் திமுகவிற்கு அவப் பெயரையும் ஏற்படுத்தியது.

anna arivalayam- updatenews360

தவிர மூத்த அமைச்சர்களில் பலர், ஸ்டாலின் நம்மை எதுவும் கேட்க மாட்டார். நாமெல்லாம் அவங்க அப்பா காலத்து ஆளு என்று நினைத்தோ என்னவோ அதிக உரிமை எடுத்துக்கொண்டு இஷ்டம் போல் பேசுவதும் தெரிகிறது. இதுவும் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

எனவே பொதுவெளியில் ஒருவர் செய்யும் தவறுகள், அடாவடி நடவடிக்கைகளை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் ஆளும் கட்சியாக இருப்பவர்களுக்கு சிக்கல்தான் வரும். மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி அது தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இப்போது கூட திமுக உள்ளாட்சி பிரதிகளின் சட்ட விதி மீறல்களை தமிழக உளவுத்துறை முதலமைச்சருக்கு எடுத்து சொன்ன பிறகுதான் இதை தீவிரமானதொரு விஷயமாகவே முதலமைச்சர் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

அதீத நம்பிக்கை

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், திமுகவினரின் அத்துமீறல்களை இதுவரை வெளியிடாமல் மூடி மறைத்து வந்த ஒரு சில நடுநிலை ஊடகங்கள் கூட
முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக தன் கட்சியினரை பொதுக்குழுவில் சாடியதால் அதை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன என்பதுதான்.

அதுமட்டும் அல்ல திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டாத அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் இது பலத்த அதிர்ச்சியை தந்திருக்கும்.

அதேநேரம் சில விஷயங்களை ஸ்டாலின் மிகவும் குறைத்து எடை போடுகிறார் என்பதும் அவருடைய பேச்சில் புலப்படுகிறது. பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்கிறார். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவரும், அவருடைய கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் மறைமுகமாக பாஜகவை தாக்கிப் பேசியே அக்கட்சியை வளரச் செய்து விட்டார்கள் என்பதே உண்மை.

அதேபோல அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்து சரிந்து கிடைக்கிறது என்கிறார். கடந்த நான்காண்டுகளாக தனிக்கட்சி நடத்தி வரும் டிடிவி தினகரனையும், அதிமுகவிலேயே இல்லாத சசிகலாவையும், தொண்டர்கள் ஆதரவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஓ. பன்னீர்செல்வத்தையும் மனதில் நினைத்து ஸ்டாலின் இப்படி சொல்லி இருக்கலாம்.

Cm Stalin Today - Updatenews360

ஆனால் அதிமுகவில் மிகப் பெரும்பான்மையானோர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது என்னும் எதார்த்த நிலையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கீழ்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தால் அது திமுகவுக்கு பாதகமான சூழலையே ஏற்படுத்தும் என்பதும் நிஜம். அதனால் இந்த விஷயத்தில் ஸ்டாலின் தப்புக் கணக்குப் போடுகிறார், என்றே சொல்லத் தோன்றுகிறது.

அதேபோல் தனது கட்சியை யாராலும் தேர்தலில் வீழ்த்த முடியாது என்ற அதீத நம்பிக்கையும் ஸ்டாலினிடம் இருப்பது தெரிகிறது. இது தவறானதொரு சிந்தனை என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் காங்கிரசை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று இறுமாப்புடன் இருந்த இந்திரா காந்திதான் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போய் ஆட்சியையும் இழந்தார்.

உண்மையிலேயே பொது இடங்களில் அநாகரிகமாகவும், பொதுமக்களை கேலி செய்யும் விதமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி-நகராட்சி பிரதிநிதிகள் மீது இனி மேலாவது முதலமைச்சர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றி கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அதை தமிழக மக்கள் நம்புவார்கள். இல்லையென்றால் முதலமைச்சரின் பேச்சு வெறும் கண்துடைப்பு நாடகம் என்றே அவர்களுக்கு கருதத் தோன்றும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 402

0

0