ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்கு.. சொல்லாததையும் செய்து காட்டுவோம் : கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Author: Babu Lakshmanan2 October 2021, 1:05 pm
மதுரை : எந்தவித வேற்றுமையும் இல்லாமல், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்காக கொண்டு அரசு செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்துவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பிற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் 376 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, கிராம மக்களிடையே அவர் கலந்துரையாடினார்.
அவர் பேசியதாவது :- பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடைக்கோடி மக்களின் குரலைக் கேட்கவே நான் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். உங்களின் மனம் கவர்ந்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன், தற்போது எனக்கு தனிச்செயலாளராக உள்ளார். வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வளர்ச்சியே அரசின் இலக்கு.
நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற கட்டடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடைக்குக் கட்டடம் கட்டித் தரப்படும். ரூபாய் 6 லட்சம் செலவில் கறையன்பட்டியில் கதிர் அடிக்கும் இயந்திரம் அமைக்கப்படும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பாப்பாபட்டியில் அமைக்கப்படும், எனக் கூறினார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாகக் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாப்பாபட்டி கிராமத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர், வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
0
0