குடியரசு தலைவருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கு வருமாறு அழைப்பு

19 July 2021, 1:35 pm
Quick Share

டெல்லி : தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 2வது முறையாக டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை அவர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது மதுரையின் பெருமையை விளக்கும் மனோகர் தேவதாஸின் The Multiple Facets of My Madurai எனும் நூலினை குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு குடியரசு தலைவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தோம். அதனை அவர் ஏறறுக் கொண்டார். அதேபோல, மதுரை நூலகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், கிண்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேகதாது அணை கட்டுமான விவகாரத்தில் பிரதமர் மோடி எங்களுக்கு உறுதியளித்துள்ளார். ஜல்சக்தி அமைச்சரும் உறுதி கொடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எந்தெந்த விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று முன்பே திமுக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 124

0

0