பதற்றத்தில் பாஜகவை சீண்டும் CM ஸ்டாலின்?… அதிரும் அரசியல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 9:41 pm
DMK - Updatenews360
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது, திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் கோபத்தை வரவழைத்து இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிற விஷயம்.

செந்தில் பாலாஜிக்கு நேரில் CM ஆறுதல்

ஏனென்றால் கடந்த 14ம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்ட பின்பு தனக்கு கடுமையாக நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஓமாந்தூரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததுமே முதலமைச்சர் ஸ்டாலின் துடிதுடித்து போய் காலையில் முதல் வேலையாக மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து ஆறுதலும் கூறினார்.

அதேபோல் அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரீசன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் கவலையோடு சென்று செந்தில் பாலாஜியை பார்த்து வந்தனர்.

பதறி சந்தித்த பிரமுகர்கள்

இதன் பிறகும் 20 அமைச்சர்கள் வரை ஓமாந்தூரார் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். முதலமைச்சரும், அவருடைய மகனும், மருமகனும் செந்தில் பாலாஜியை பார்த்து விட்டு வந்த பிறகும் கூட அவரை பார்க்காமல் போனால் கட்சி மேலிடம் நம்மைப் பற்றி என்ன நினைக்குமோ என்று பயந்தோ அல்லது மரியாதை காரணமாகவோ கூட இது நடந்து இருக்கலாம்.

இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியை அவருடைய விருப்பப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது.

என்றபோதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசின்
மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

17 மணி நேர விசாரணை

இதற்கு முக்கிய காரணம் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 17 மணி நேரம் விசாரணை நடத்தியதற்கு இணையாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அறையில் 10 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் ஏராளமானவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதையும் குறிப்பிட வேண்டும்.

ஏனென்றால் 2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு சில நாட்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அன்றைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டதை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் இதை தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலை குனிவு என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

முதல்வர் இருக்கும் போது நடத்த முடியுமா?

ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து பல மணி நேரம் சோதனை நடத்தியதை ஸ்டாலினால் கொஞ்சமும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது.

மேலும் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் கரூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சென்னை நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அவருடைய நண்பர்கள், உறவினர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது ‘எங்கள் தலைவர் நாட்டில் இல்லாத நேரத்தில் இப்படி கோழைத்தனமாக சோதனை நடத்துகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருக்கும்போது இது மாதிரி சோதனை நடத்த முடியுமா? தைரியம் இருந்தால் நடத்திப் பார்!’ என்று திமுக நிர்வாகிகளில் சிலர் கொந்தளித்து சவாலும் விடுத்தனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பது போல் அமலாக்க துறையின் ரெய்ட் அமைந்து விட்டதால் சவால் விட்ட திமுக நிர்வாகிகளுக்கு அவமானம் ஏற்பட்டதுதான் மிச்சம்.

பாஜகவை கடுமையாக தாக்கிய முதலமைச்சர்

இது திமுக தலைவர் ஸ்டாலினை கொதிக்க வைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதனால்தான் இந்த சோதனை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், கொதிநிலையின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார்.

மத்திய பாஜக அரசை இதற்கு முன்பு எப்போதும் அவர் இப்படி தாக்கி பேசியது இல்லை என்று கூறும் அளவிற்கு அவருடைய பேச்சில் கோபம் கொப்பளித்தது.

ஸ்டாலின் பேசும்போது, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை மூலம் கொடுக்கப்படும் தொல்லைகள், அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகாரைக் கொண்டு, 18 மணி நேரம் அடைத்து வைத்து மன அழுத்தம் கொடுத்து, பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதய நோயை உருவாக்கியுள்ளனர். செந்தில் பாலாஜி மீதான புகாரில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தால், விசாரணை நடத்துவதை தவறு என்று கூறவில்லை. ஆனால் 5 முறை எம்எல்ஏவாக, 2-வது முறையாக அமைச்சராகியுள்ள அவரை, தீவிரவாதியைப்போல் அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் உள்ளது?

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதுபோல, அமலாக்கத்துறையின் நடவடிக்கை இருக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. அமலாக்கத் துறை மூலம் அரசியல் செய்கிறது. கருத்தியல், அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டுவதே பாஜகவின் பாணி.

உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் திமுகவினர் பயப்படுபவர்கள் அல்ல. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள். எங்களுக்கென தனித்த அரசியல் கொள்கை, கோட்பாடுகள் உள்ளன. மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு சக்திகளை, அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம்.

திமுகவையோ, திமுகவினரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை. எனவே, மத்திய அரசை ஆளும் பாஜக அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். 2024-ல் நமக்கான தேர்தல் களம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் நாம் இவர்களை சந்திப்போம்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல

அவருடைய இந்த ஆவேச பேச்சு அகில இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“முதலமைச்சர் ஸ்டாலின் இது போன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல”
என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அப்போது செந்தில் பாலாஜியை எதிர்த்தவர்

“ஏனென்றால் செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து 2016 தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகம் பேசியவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்தான். குறிப்பாக குளித்தலையில் நடந்த பிரசார கூட்டத்தில், 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி நடத்துனர், ஓட்டுனர் மெக்கானிக் பணிகளில் சேர்த்து விடுவதாக கூறி மூன்று லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை 40க்கும் மேற்பட்டோரிடம் லஞ்சம் பெற்று உள்ளார். ஆனால் அவர் மீது ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுவோம்” என்று அனல் பறக்க பேசினார்.

அப்படிச் சொன்னவர் அதே செந்தில் பாலாஜியை 2018ம் ஆண்டின் இறுதியில் திமுகவில் இணைத்தும் கொண்டார். அது மட்டுமல்ல அவருடைய எம்எல்ஏ பதவி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக அரவக்குறிச்சி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அவரையே திமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தவரும் அதே ஸ்டாலின்தான்.

வளம் கொழிக்கும் துறை கொடுத்து அழகு பார்த்தவர்

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட வைத்ததுடன் வெற்றி பெற்றதும் செந்தில் பாலாஜிக்கு தனது அமைச்சரவையில் வளம் கொழிக்கும் மின்சாரம், மதுவிலக்கு துறை இரண்டையும் கொடுத்து அழகு பார்த்தவரும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்தான்.

வேலை தருவதாக கூறி லஞ்சம் பெற்றவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு இருதரப்பினரும் சமாதானமாக சென்று விட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தனக்கு சாதகமாக வழக்கில் தீர்ப்பை பெற்றாலும் கூட பாதிக்கப்பட்ட ஒரு சிலர் இதில் திருப்தி அடையாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்து விட்டனர். இந்த வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை, அமலாக்கத்துறையும் இந்த லஞ்ச விவகாரத்தில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்தது.

தவிர இந்த வழக்கின் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடித்து அது தொடர்பான அறிக்கையை எங்களிடம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

அமலாக்கத்துறை அதிரடி

இந்த நிலையில்தான் கடந்த ஒரு மாதமாக செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய அரசு இல்லத்திலும், தலைமைச் செயலக அறையிலும், கரூரில் அவருடைய தம்பியின் அலுவலகம் உட்பட எட்டு இடங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆதாரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பலத்த குற்றச்சாட்டு வைத்த ஒரு வழக்கிலேயே தனது ஆதரவு அமைச்சர் ஒருவருக்கு சிக்கலான நிலை உருவாகிவிட்டதே என்பதை உணர்ந்த பிறகாவது செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அமலாக்க துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து நீங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும்படி கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

அதேநேரம் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் செந்தில் பாலாஜிக்காக ஸ்டாலின் இதற்கெல்லாம் காரணம் மத்திய பாஜக அரசுதான் என்று கண்களை மூடிக்கொண்டு குற்றம் சாட்டுகிறார். உண்மையிலேயே வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதனால்தான் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என்ற உண்மையைக் கூட முதலமைச்சர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

நெருக்கடியால் நெஞ்சுவலி

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதையும் உறுதி செய்த பிறகுதான் அவரை கைது செய்தும் இருக்கிறது. எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் பாஜக அரசை குற்றம் சாட்டுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மறைமுகமாக விமர்சிப்பது போல இருக்கிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டு, இதய நோய்க்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்றால் இப்பிரச்சனையை திமுக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணவேண்டுமே தவிர மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக பேசுவது நியாயம் அல்ல.

இபிஎஸ்சை இழுத்து விட்ட முதலமைச்சர்

இப்படி முதலமைச்சர் ஆவேசம் காட்டுவதால், சவுக்கு சங்கர் போன்ற யூ டியூபர்கள் சிலர் செந்தில் பாலாஜி மூலம் திமுக தலைமைக்கு பணம் கொட்டுகிறது என்று கூறுவது உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

அதேநேரம் இதில் எதற்காக சம்பந்தமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசை முதலமைச்சர் கடுமையாக சாடினார் என்பதும் புரியாத புதிராக உள்ளது. கடந்த ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தியதை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், இப்போது தனது ஆட்சியிலும் அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டதே என்ற கோபத்தில் வேண்டுமென்றே எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்து பேசுவதுபோல இது உள்ளது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 318

0

0