தேர்தல் வரும்போது தான் எங்க நியாபகம் வருதா..? காங்., எம்பி ஜோதிமணியை திணறடித்த வாக்காளர் ; கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 8:34 am
Quick Share

கரூரில் எம்பி ஜோதிமணியை தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா..? என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணியிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா..? வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை, குறிப்பாக நன்றி சொல்ல கூட வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்டார்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன் என்ம், நீங்கள் வேண்டும் என்றே என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் ஆவேசமாக பேசினார்.

ஆனால், எதையும் கண்டு கொள்ளாத அந்த நபர், தொடர்ந்து,”வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள், ஃபோன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா..? எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது,” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் சற்று பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்பி ஜோதிமணியிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Views: - 237

0

0