காங்., விசிக தனித்து போட்டியா?… பதை பதைப்பில் தவிக்கும் திமுக… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
4 March 2024, 9:05 pm
Quick Share

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக இரு கட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியே தீர வேண்டும் என்று தொடர்ந்து மல்லுக்கட்டி வருகின்றன. இதனால்தான் இக் கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என்பதே இன்னும் இழுபறியாக உள்ளது.

காங்கிரஸ் பத்து தொகுதிகளுக்கும் குறையாமல் எதிர்பார்க்கிறது. 2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகளை கொடுத்தால் அதை ஏற்க மாட்டோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அதிரடியாக கூறுகிறார்.

இன்னொரு பக்கம், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் ஒதுக்குவதெல்லாம் எங்களைச் சார்ந்தது அல்ல. அதை தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவே பார்த்துக் கொள்ளும் என்றும் ஸ்டாலினுக்கு செக் வைக்கிறார்.

விசிக தலைவர் திருமாவளவனோ எங்களுக்கு இரண்டு தனித் தொகுதிகளும் ஒரு பொதுத் தொகுதியும் வேண்டும் எங்கள் கட்சியின் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அறிவித்து விட்டார். சிதம்பரம், விழுப்புரம் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியும் வேண்டும் என விசிக கறார் காட்டி வருகிறது.

இதனால்தான் கடந்த இரண்டாம் தேதி காலை 11.30 மணிக்கு அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு வருமாறு திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தும் கூட விசிக அதை புறக்கணித்துவிட்டது. சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் அன்று பிற்பகல்
3 மணி வரை ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அப்போது அனைவருமே நியாயப்படி பார்த்தால் நமக்குள்ள வாக்கு வங்கியை புரிந்துகொண்டு திமுக நான்கு தொகுதிகளாவது ஒதுக்க முன் வந்திருக்கவேண்டும். நாம் வைத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது. எனவே விசிக மூன்று தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடவேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்தே திருமாவளவனும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் அன்று அறிவாலயம் சென்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதுதவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக தனக்கு ஒதுக்கும் ஒரு தொகுதியில் தங்களது பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் உதயசூரியனில் நிற்க மாட்டோம் என்று திமுகவுக்கு தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார்.

இதில் வைகோவை திமுக எப்படியும் சமாளித்து தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடும் என்கிறார்கள். ஏனென்றால் அக் கட்சிக்கு உள்ள வாக்கு வங்கி எவ்வளவு என்பது திமுகவுக்கு நன்றாகவே தெரியும். அதனால் வைகோவும் வேறு வழியின்றி இறங்கி வந்து விடுவார் என்பது வெளிப்படையான ஒன்று.

ஆனால் விசிகவும், காங்கிரசும் தங்களது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திமுக தவியாய் தவிக்கிறது. இதனால்தான் மார்ச் 1ம் தேதி திமுக கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

காங்கிரசை பொறுத்தவரை டெல்லி மேலிடம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது, எனவே ஹை கமாண்ட் சொல்படிதான் என்னால் செயல்பட முடியும் என்று செல்வப் பெருந்தகை சொல்கிறார். இதனால்தான் அவர் திமுக தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்தும் கூட தொகுதி பங்கீடு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை.

இத்தனைக்கும் இரு வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியபோது 2019 தேர்தல் போல எங்களுக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளையாவது ஒதுக்குங்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை அருகில் வைத்துக் கொண்டே கேட்கவும் செய்தார். ஆனால் திமுக தலைவரான ஸ்டாலின் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடம் மூன்று தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டும் அதற்கு திமுக தலைமை ஒப்புக் கொள்ளவில்லை என்பதை டெல்லி காங்கிரஸ் சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி அன்று தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகம் சென்று திருமாவளவனை சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் கூட அடுத்த சில நாட்களில் அதன் பின்னணி என்னவென்று வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

ஏனென்றால் இவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்த மறுநாள்தான் திமுக தொகுதி பங்கீட்டு குழு விசிகவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் கூட திருமாவளவன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 2019 தேர்தல் போல தங்களுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்கினாலே போதும் என்று அதுவரை கோரிக்கை வைத்து வந்த காங்கிரஸ் திடீரென்று எங்களுக்கு இரட்டை இலக்கத்தில், அதாவது பத்து தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தே தீர வேண்டும் என்று உறுதியாக பேசவும் ஆரம்பித்து விட்டது.

அதுவும் செல்வப் பெருந்தகை சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மார்ச் மாத இறுதியில் தான் கையெழுத்தானது, அப்படி பார்த்தால் இன்னும் சில வாரங்கள் இருக்கிறதே? அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார். மேலும் இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சென்னைக்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீட்டை திருப்திகரமாக முடித்து விடுவார் என்றும் தமிழக காங்கிரஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரே கூட்டணியில் உள்ள காங்கிரசும், விசிகவும் திமுகவை தங்களின் கோரிக்கைக்கு பணிய வைத்து விட வேண்டும் ஒரே நோக்கத்தில் கைகோர்த்து செயல்படுவது தெரியவந்துள்ளது.

உண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பே அதிமுக வெளியேறி விட்டாலும் அதை தங்களுக்கான வாய்ப்பாக இந்த இரு கட்சிகளும் கருதவில்லை. அதேநேரம் தங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது என்பதை மறைமுகமாக திமுக தலைமைக்கு உணர்த்தவும் செய்தன.

என்றபோதிலும் காங்கிரசுக்கும், விசிகவுக்கும் நம்மை விட்டால் வேறு கதியே இல்லை, அவர்கள் எங்கும் போய் விட மாட்டார்கள் என்று கருதி திமுக தலைமை இன்று வரை இறங்கி வரவில்லை.

அதேநேரம் தமிழக காங்கிரஸ், விசிக கட்சிகளின் சிந்தனை தற்போது வேறு விதமாக மாறி இருக்கிறது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் தங்களுக்கு குறைந்தபட்சம்,10 சதவீத வாக்குகள் இருப்பதாக நம்புகிறது. விசிகவுக்கு
7 சதவீத ஆதரவு தமிழக வாக்காளர்களிடம் உள்ளதாக கருதுகிறது.

ஒட்டுமொத்தமாக இப்படி 17 சதவீத ஓட்டு கிடைக்க வாய்ப்பு இருப்பதும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் காங்கிரஸுக்கு இன்னும் மூன்று சதவீத வாக்குகள் வரை கூடுதலாக கிடைக்கும் என்றும் டெல்லி மேலிடம் கணக்கு போடுகிறது.

இப்படி எங்களால் 20% ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும், அதன் மூலம் தமிழகத்தில் நமது கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட முடியும் என்ற நிலை இருக்கும்போது திமுக தலைவர் ஸ்டாலின் நாம் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதற்கு ஏன் தயங்குகிறார்? இத்தனைக்கும் நாங்கள் 15, 20 தொகுதிகளா கேட்கிறோம்?… பத்து எம்பி சீட்டுகள் தானே கேட்கிறோம்? விசிகவும் கூட மூன்று தொகுதிகள் தானே கேட்கிறது என்ற வாதத்தை டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் வைக்கின்றனர்.

இந்தப் புள்ளி விவர கணக்குகளை எல்லாம் கேள்விப்பட்ட திமுக தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவரான டி ஆர் பாலு எம்பி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், விசிக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளிடம் ஆரம்ப கட்ட பேச்சில் ஈடுபட்டபோது திமுக சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் அந்தந்த கட்சிகளுக்கு தொகுதிகளில் உள்ள செல்வாக்கு பற்றிய புள்ளி விவரங்கள் அடிப்படையில் கறாராகவும், கேலியாகவும் டி ஆர் பாலு பேசியதாக கூறப்படுவதை மற்ற கட்சிகள் எப்படி எடுத்துக் கொண்டன என்று தெரியாது. ஆனால் தேசிய கட்சியான காங்கிரசும், தமிழகத்தில் பட்டியலில் இன மக்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் விசிகவும் தங்களை திமுக தலைமை அவமானப்படுத்தும் நோக்கில்தான் இப்படி கூறுகிறது என்று கொந்தளித்து விட்டன.

அதனால்தான் காங்கிரஸ் பத்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறது. விசிகவும் தங்களுக்கு மூன்று தொகுதிகளை கொடுத்தே தீர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது.

இந்த விவகாரத்தில் திமுக தலைமை பணிந்து செல்லுமா? காங்கிரஸ், விசிக கேட்கும் தொகுதிகள் அப்படியே கிடைத்து விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 133

0

0