குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடலாமா..?… திமுக திருடிய பணத்தை வசூலிப்போம் ; திமுகவை விளாசிய பிரதமர் மோடி!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 8:04 pm
Quick Share

குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல என்று திமுக மற்றும் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சென்னை – நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, புலி தோள் போன்ற பட்டு பொன்னாடையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு அணிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தென்னை மரம் ஏறுபவர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 142 கோடி மக்கள் தான் பிரதமர் மோடியின் குடும்பம். திமுகவினருக்கு கோபாலபுரத்தில் உள்ள குடும்பத்தினர் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். 4வது தலைமுறையாக அரசியலில் உள்ள குடும்பத்தினரை அரசியலை விட்டே அகற்ற வேண்டிய நேரமிது. தமிழகத்தில் இருந்து மோடியின் குடும்பமாக 39 எம்பிக்களை அனுப்பி வைக்க வேண்டும்.

வாய்ப்பேச முடியாத சிறுத்தைகளுக்கு பிரதமர் உதவி செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவிக்கப்பட்டது. அடுத்த 60 நாட்களுக்கு தவம் போல பாஜகவினர் பணி செய்ய வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளார் பிரதமர். பேய்கள் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள், என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது :- சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும் போதெல்லாம் சிலருக்கு பயம். ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போதெல்லாம் உத்வேகம் அடைகிறேன். இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைப்பதில் சென்னை முக்கிய பங்காற்றுகிறது. சென்னை திறன், வணிகம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக திகழ்கிறது.

தேசம் வளரும் போது எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியும் உறுதியாகிறது. சென்னை போன்ற நகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது.

மக்கள் துன்பத்தில் இருந்த போது திமுக உதவவில்லை ; மக்களின் துயரங்களை பற்றி கவலை இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிரமங்களை குறைப்பதற்கு பதில் திமுக அரசு அதிகப்படுத்தியது. மக்களின் சிரமங்களை குறைப்பதை விடுத்து பிரச்சனை இல்லாதது போல ஊடகங்களில் காட்ட முயற்சித்தனர். பாஜக அரசு மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு உங்களுக்காக பணியாற்றுகிறது.

மத்திய அரசு ரேசனில் இலவச அரிசி வழங்குகிறது ; இலவச கொரோனா தடுப்பூசி வழங்கியது. பல லட்சம் கோடி நிதி நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் கோடியை சுருட்டுவது கடினமாக உள்ளது என்பதே திமுகவின் மனக்குறையாக உள்ளது. திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும்.

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பணத்தை கொள்ளையடிக்க விட மாட்டேன். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் செய்கிறது. என்னுடைய நோக்கம் நாட்டு மக்களின் நலனை கருத்தில் அரசியல் செய்வது தான். வாரிசு அரசியல் செய்தவர்கள் ஆட்சியில் நாட்டில் பல லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து இருந்தது.

கல்பாக்கத்தில் இன்று முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஈனுலை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கல்பாக்க ஈனுலை செயல்பட தொடங்கும் போது உலகின் 2வது வளர்ந்த நாடாக இந்தியா திகழும். கடந்த 50 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் சக்தி திட்டங்களை பற்றி மட்டுமே நான் பட்டியலிட்டுள்ளேன்.

எனக்கு குடும்பமில்லை என மீண்டும் மீண்டும் கூறுபவர்களின் குறிக்கோள் குடும்ப நலம் மட்டுமே. வீட்டை விட்டு வெளியேறிய நான் தேசத்தை குடும்பமாக கொண்டிருக்கிறேன். குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நாட்டு மக்களே எனது குடும்பம்.

காங்கிரஸ், திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கியுள்ளனர். இண்டியா கூட்டணிக்கு தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடும்பத்தை பற்றி யோசிப்பதை விட வேறு சிந்தனை இல்லை. இண்டியா கூட்டணியினரால் தான் இளைஞர்கள் அரசியலை விட்டு விலகி நிற்கின்றனர். குடும்ப அரசியலால் பதவி பெற்ற ஒருவர் தமிழக அரசில் இடம்பெற்று ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறார்.

குடும்ப அரசியல் செய்பவர்கள் தேசத்தின் மக்களை அடிமைகளாக கருதும் குணம் கொண்டவர்கள். தமிகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதால் வருங்கால சந்ததியினர் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சி ஆதரவில் போதைப்பொருள் தங்கு தடையின்றி தமிழகத்தில் புழங்கி வருகிறது. பாஜகவை தமிழக மக்கள் ஆதரித்தால் போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மோடியின் கியாரண்டி, எனக் கூறினார்.

Views: - 161

0

0