பாஜகவுக்கு தாவும் விஜயதாரணி…? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு…?திமுக, காங்கிரஸ் கடும் ‘ஷாக்’!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 9:05 pm
Quick Share

தமிழக காங்கிரசில் பெண் தலைவர்களை வளர விடுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

காமராஜர் காலத்தில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த
டி என் அனந்தநாயகிக்கு பிறகு வேறு பெண்கள் யாரும் காங்கிரஸில் தலை தூக்க முடியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டனர் என்றும் கூறுவார்கள். அதுபோன்ற நிலைமைதான் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி கண்டுள்ள விஜயதாரணிக்கும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

2021சட்டப்பேரவைத் தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வெளியிட்ட மூன்றாவது இறுதி வேட்பாளர் பட்டியலில்தான் அவருடைய பெயரே இடம் பெற்றது. அதையும் கூட
விஜயதாரணி, டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, போராடித்தான் எம்எல்ஏ சீட்டும் வாங்கினார் என்பார்கள். இத்தனைக்கும் பிரபல குழந்தைக் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்திதான் விஜய தாரணி.

பாரம்பரியமும், மக்கள் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்த ஒருவருக்கே கே எஸ் அழகிரி, எம்எல்ஏ சீட் கொடுக்காமல் இழுத்தடித்து சோனியாவின் ஆதரவுடன் அதை பெறவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளிவிட்டார். அதுமட்டுமல்ல கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விஜயதாரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்க விடாமல் அழகிரி முட்டுக்கட்டையும் போட்டு வருகிறார் என்ற பேச்சு சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் இன்றளவும் உண்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரசை வளர்ப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத கே எஸ் அழகிரி, அதே போல விஜயதாரணியையும் முன்னேறவிடவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதையும் மீறி தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பதவியையும் அவர் பெற்று விட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில்தான் விஜயதாரணி பாஜகவில் இணைய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பான தகவல் இறக்கை கட்டி பறக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தமிழக காங்கிரசுக்கு மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பலத்த ஷாக் தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த செய்தி ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் விஜயதாரணியோ டெல்லியில் இருந்தார். அவரை செய்தியாளர்களால் எளிதில் தொடர்பும் கொள்ள முடியவில்லை.

விஜயதாரணி மறைமுகமாக தேசிய பாஜக தலைவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் கன்னியாகுமரி தொகுதியை தனக்கு ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தால் காங்கிரசில் இருந்து விலகி, பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணையத் தயார் எனவும் கூறியிருக்கிறார் என்று சில ஆங்கில டிவி சேனல்களில் காட்டுத்
தீ போல செய்தி பரவியது.

இது தொடர்பாக விஜயதாரணியின் ஆதரவாளர்கள் கூறுகையில் “கட்சியில் சீனியரான விஜயதாரணி 1999-ம் ஆண்டு முதலே எம்பி சீட்டு கேட்டு வருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த முறையாவது சீட் கொடுங்கள் என டெல்லியில் இருந்தவாறு காய் நகர்த்தி வருகிறார். அவருக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, எதிரிகள் யாராவது இப்படி புரளியை கிளப்பி விட்டிருக்கலாம்”
என்கின்றனர்.

அதேநேரம் விஜயதாரணி பாஜகவில் இணைவதற்கு மிகுந்த விருப்பம் கொண்டு இருப்பதாகவும், ஆனால் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் சில சிக்கல்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு முக்கிய விஷயம். 2021 தமிழக தேர்தலின்போது விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் சீட்டு கொடுக்காமல் காங்கிரஸ் தரப்பில் போக்கு காட்டினார். அப்போது அத்தொகுதியை கொடுக்கலாம் என பாஜக தரப்பில் பேசப்பட்டது. மேலும், விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமல், அந்த நேரத்தில் பாஜக காத்திருக்கவும் செய்தது.

இத்தகைய இழுபறி நிலையில் காங்கிரஸ் கட்சியில் விஜயதாரணிக்கு ஒரு வழியாக சீட் வழங்கப்பட்டதால், அத்துடன் அந்த விவகாரம் அத்துடன் முடிவுக்கும் வந்தது.

எனினும் இந்த கசப்பான அனுபவத்தால் விஜயதாரணி மிகுந்த அப்செட்டுக்கு உள்ளாகி இருந்தார். தன்னைவிட ஒரு வயது மூத்தவரான கனிமொழிக்கு திமுகவில் எம்பி சீட் வழங்கப்பட்டு அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டார். ஆனால் தமிழக காங்கிரஸில் தனக்கு ஒரு எம்எல்ஏ சீட் கொடுப்பதற்கு கூட இப்படி தயங்குகிறார்களே என்ற மன வேதனை விஜயதாரணியிடம் இன்றளவும் உண்டு.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரசில் சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீட் கிடைக்காவிட்டால், பாஜக பக்கம் சாயும் மனநிலையிலும் உள்ளார். எனவே அவருடன் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் டெல்லியில் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவது உண்மைதான் என்கிறார்கள்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் விஜயதாரணியை டெல்லி செய்தியாளர்கள் ஒரு வழியாக தேடிப் பிடித்து, நீங்கள் பாஜகவில் இணைய போவதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர். இதை உடனடியாக அவர் மறுப்பார் என்று எதிர்பார்த்தால், “நான் ஒரு வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்துக்கு வந்து இருக்கிறேன். இப்போதுதான் நீதி மன்றத்தை விட்டு வெளியே வருகிறேன். அந்த செய்தியை நானும் கேள்விப்பட்டேன். எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது”
என்று மழுப்பலாக பதிலளித்தார்.

இதனால் கன்னியாகுமரியை தனக்கு ஒதுக்குவதாக டெல்லி பாஜக மேலிடம் உறுதி அளித்தால் காங்கிரசிலிருந்து விலகுவதற்கு அவர் தயங்க மாட்டார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

விஜயதாரணி மட்டுமல்ல, காங்கிரசில் அவரைப் போல இன்னும் சில கோடீஸ்வர எம்எல்ஏக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர் என்பதை தெரிந்துகொண்டுதான் தமிழக காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக விதித்த நான்கு முக்கிய நிபந்தனைகளில், உங்கள் எம்எல்ஏக்கள் யாருக்கும் எம்பி சீட் கொடுக்கக்கூடாது என்று கறாராக கூறியிருந்தது.

அதேநேரம் பாஜகவில் இணைந்து கன்னியாகுமரி தொகுதியில் விஜயதாரணி போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது.

இதனால் விஜயதாரணி சட்டப்பேரவைத் தேர்தலில், தான் போட்டியிட்டு வென்ற விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய நேரிடும்.
அங்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடக்கும் என்பதும் உறுதி. எப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது ஈ வி கே எஸ் இளங்கோவனுக்காக 300 கோடி ரூபாய்க்கு மேல் திமுக தரப்பில் செலவு செய்ததாக கூறப்பட்டதோ அதேபோன்ற கடும் நெருக்கடி விளவங்கோடு தொகுதியிலும் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.

ஒருவேளை விஜயதாரணி தோற்க நேர்ந்தாலும் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்பது நிச்சயம். ஏனென்றால் கட்சி தாவல் தடை சட்டப்படி அவருடைய எம்எல்ஏ பதவியை காங்கிரஸ் பறித்து விடும். இதனால் எப்படி பார்த்தாலும் விஜயதாரணி பாஜகவில் இணைந்த பின்பு அவர் எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டாலும் விளவங்கோட்டில் இடைத்தேர்தல் நடக்கப் போவது உறுதி. அதனால் அத் தொகுதி மக்கள் அனைவரும் பண மழையில் நனைவதற்கான அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.

Views: - 339

0

0