ராகுல் யாத்திரையில் வெடித்த உட்கட்சிப் பூசல்… ஜோதிமணிக்கு எதிரான மோதல் உச்சம்… கரூர் தொகுதியில் எம்பி தேர்தலா?…

Author: Babu Lakshmanan
15 September 2022, 3:53 pm
Quick Share

கவனம் பெற்ற ஜோதிமணி

கே எஸ் அழகிரிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படப் போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த 6 மாதங்களாகவே அக்கட்சியில் நிலவி வருகிறது.

ஏனென்றால் கே எஸ் அழகிரியின் பதவிகாலம் கடந்த பிப்ரவரி மாதமே முடிவடைந்து விட்டது. ஆனாலும் புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியான ஜோதிமணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் காங்கிரஸ் நடத்திய அத்தனை போராட்டங்களிலும் ஜோதிமணி தீவிரமாகப் பங்கேற்று, மத்திய பாஜக அரசுக்கு எதிராக உரக்க குரல் எழுப்பியதும், ராகுலை விசாரணை வளையத்துக்குள் அமலாக்கத்துறை கொண்டு வந்தபோது போலீசுடன் அவர் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் கட்சி மேலிடத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

Congress MP Jothimani - Updatenews360

அதுமட்டுமின்றி அவருடைய போராட்ட குணம் டிவி செய்தி சேனல்களிலும், நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்து காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஜோதிமணியும் ஒருவர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

புதிய பொறுப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெறுவதற்காகவே போராட்டங்களின்போது ஜோதிமணி இப்படி தடாலடி நாடகமாடுகிறார் என்ற மனக் குமுறல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் இருப்பதால் அவர்கள் ஜோதி மணிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எனினும் ராகுல் காந்தியின் ‘குட் புக்’கில் ஜோதிமணி இருப்பதால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவருக்கு கட்சி தலைமை வழங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த 7-ம் தேதி மாலை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி தனது 3500 கிலோ மீட்டர் நடைபயணத்தை ராகுல் தொடங்கினார்.

முன்னதாக, அவருடைய கன்னியாகுமரி பயணத்தையொட்டி, கோஷ்டி பூசல்கள் இல்லாமல், ஒற்றுமையாக இணைந்து ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் வழக்கமாக நிலவும் கோஷ்டி பூசல்களால் ராகுலின் ஒற்றுமை பயணத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் மீறி நிகழ்ச்சியை ஜோதிமணி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் என்ற பேச்சு காங்கிரஸ் மேலிடம் வரை பரவியது. இங்குதான் அவருக்கு வினையே ஆரம்பித்தது.

ராஜினாமா செய்யத் தயாரா..?

இதற்கிடையே ராகுலின் கன்னியாகுமரி வருகையை யொட்டி காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி ஏராளமாக பணம் வசூல் செய்து அதை கணக்கில் காட்டாமல் விட்டு விட்டதாக தனக்கு தெரிந்த தலைவர் ஒருவரிடம், நடை பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஜோதிமணி தனது கடுங்கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொன்.கிருஷ்ணமூர்த்தி கொந்தளித்து போய் ஜோதிமணி பிறரது உழைப்பை திருடுவதாக ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

அவர் ஜோதிமணி மீது தாக்குதல் தொடுத்து இருப்பது, சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகவும் பரவி வருகிறது. மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி அப்படி என்னதான் சொன்னார்?… “அன்பு சகோதரியார்‌ நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார் ஜோதிமணி அவர்களுக்கு வணக்கம். இதை பேஸ் புக் வாயிலாக எழுதவேண்டிய அவல நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன்.

தங்களிடம் கன்னியாகுமரியிலேயே நேரடியாக கேட்டு விடத்தான் நினைத்தேன். தங்களை தனியாக சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. போனில் தங்களை அழைத்தேன். தாங்கள் எடுக்கவே இல்லை. அதனால் வேறு வழியின்றி இதன் மூலம் தங்கள் பதிலை பெற விரும்புகிறேன்.

தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நான் நிறைய வசூல் செய்து விட்டதாக முக்கிய தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள். இதை கேட்டவுடன் என் மனம் துடிதுடித்துவிட்டது. நான் தங்களுக்கு சவால் விட்டு கூறுகிறேன், நான் ஒரே ஒருவர் இடத்தில் வசூல் செய்து இருக்கிறேன் என்று தாங்கள் நிருபித்து விட்டால் என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை அந்த நொடியே ராஜினாமா செய்து விடுகிறேன். அப்படி‌ தாங்கள் நிருபிக்காவிட்டால்‌ நீங்கள் உங்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தயாரா?”

மேலும் தாங்கள் நன்றி சொல்லி பேஸ் புக்கில் பதிவு செய்து உள்ளதை படித்தேன். சிரிப்பு தான் வந்தது. பிறரது உழைப்பை திருடாதீர்கள். இரவு பகல் பாராமல் இந்த வயதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், மாவட்டம் மாவட்டமாக கூட்டம் போட்டு ராகுல் வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி‌யதால் வந்த கூட்டம்தான் அது. அவருக்கு துணையாக ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் எடுத்த பெரும் முயற்சி. அதை உங்களால் மறுக்க முடியுமா ?…

இந்த பாத யாத்திரையில் தங்களின் பங்களிப்பு என்ன என்பதையும் அந்த பேஸ் புக்கில் தாங்கள் குறிப்பிட்டு இருக்க‌வேண்டும். எல்லாவற்றையும் நீங்களே செய்ததுபோல, எதையுமே செய்யாத தாங்கள் எழுத எப்படி உங்கள் மனசாட்சி இடம் தருகிறது‌? எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செலவில் பங்கு எடுத்து கொண்டார்கள். தங்கள் பங்களிப்பு இதில் என்ன? பங்களிப்பே இல்லாத தாங்கள் பேஸ் புக்கில் எழுதுவது எந்த வகையில் நியாயம்? உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரர் பொன் கிருஷ்ணமூர்த்தி நன்றி”என்று காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.

இப்பிரச்சனை தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ராகுலின் நடைபயணத்தின்போது கூட அது தீரவில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

ஜோதிமணி போன்ற துடிப்பான தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை என்று அக் கட்சி மேலிடம் கருதும் நிலையில், இதுபோன்ற சர்ச்சையில் ஜோதிமணி சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் ராகுலின் பாத யாத்திரை தொடர்பாக கிடைக்கும் விஷயங்களை விமர்சிக்கும் பாஜகவினருக்கு தீனி போடுவதாகவும் அமைந்து விட்டது.

இடைத்தேர்தலா?

இதை மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி
தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ராஜினாமா செய்கிறாரா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்? கரூர் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தலா?” என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

“தமிழக காங்கிரஸ் துணைத் தலைவரின், முகநூல் பதிவு ஜோதிமணி எம்பியை, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கக்கூடாது என்பதை பட்டவர்த்தனமாக வலியுறுத்துவது போல் உள்ளது” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் பொன் கிருஷ்ணமூர்த்தி, தனது பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நான்கு பேருமே ஜோதிமணிக்கு தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாதவர்கள் என்பது அக்கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இவர்கள்தான் தங்களது ஆதரவாளர்களில் யாராவது ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். அதற்காக ஜோதிமணி பற்றி எவ்வளவு தரம் தாழ்ந்து பேச முடியுமோ அந்த அளவிற்கு தங்களது ஆதரவாளர்கள் மூலம் தவறான தகவல்களை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர், என்கிறார்கள். எனினும் இதையும் மீறி, தமிழக காங்கிரஸ் தலைவராக ஜோதிமணி நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

பின்னடைவு

கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஜோதிமணி எம்பிக்கும் மோதல் போக்கு இருப்பதால் திமுகவுடன் அவர் அனுசரித்துச் செல்ல மாட்டார். அது, தேர்தல் நேரத்தில் தொகுதிகளை திமுகவிடம் பேரம் பேசி வாங்குவதில் பெருத்த சிக்கலை ஏற்படுத்தும். அதனால் ஜோதிமணிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்கக்கூடாது என்று கே எஸ் அழகிரி ஆதரவாளர்கள் கட்சியின் தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜோதிமணியின் ஆதரவாளர்களோ, தமிழக காங்கிரஸ் தலைவர்களான
கே எஸ் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு போன்றோர் திமுகவிடம் சரணாகதி அடைந்து அடிமை போல் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருந்தால் தமிழகத்தில் காங்கிரசை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?…என்ற ஆதங்கத்தை ராகுலிடம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

ராகுலின் நடைபயணத்தில், ஜோதிமணியும் பங்கேற்று வருகிறார். அவருடன் தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார். இது தெரிந்திருந்தும் பொன் கிருஷ்ணமூர்த்தி கேலி பேசுகிறார். இது சரியல்ல. என்று ஜோதிமணியின் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர்.

அதேநேரம் பொன். கிருஷ்ணமூர்த்தி சவால்விட்டு இருப்பதுபோல் ஜோதிமணி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட மாட்டார். எனவே கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் என்பதற்கான வாய்ப்பே ஏற்படாது.

காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால், மாநிலத் தலைமைக்கான போட்டியில் உள்ள ஜோதிமணி வேண்டுமென்றே இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்க வைக்கப்படுகிறாரா? அல்லது தலைமையை கைப்பற்றும் அவரது அதிரடி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றா என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதுமே காங்கிரசில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமை நிலவுவதுதான். கோஷ்டி பூசல்களால் அக்கட்சி தேர்தல்களில் தொடர்ந்து பெரும் பின்னடைவையும் சந்தித்து வருகிறது. எனவே இந்திய ஒற்றுமைப் பயணத்தை விட, காங்கிரசுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கே ராகுல் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் கட்சியை வலுப்படுத்தி 2024 தேர்தலை தைரியமாக சந்திக்க இயலும். இல்லாவிட்டால் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்துவது பகல் கனவாகவே முடியும்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 404

0

0