திமுகவுடன் காங்கிரசை இணைக்கச் சொல்வதா…? அண்ணாமலைக்கு அஞ்சும் அழகிரி..!
Author: Babu Lakshmanan14 December 2021, 8:03 pm
தமிழக பாஜகவின் தலைவராக, அண்ணாமலை ஐபிஎஸ் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
அதிரடி காட்டும் அண்ணாமலை
இந்த 6 மாதங்களில், மாநிலத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக, தனக்கு முன்பாக இருந்த தலைவர்களை விட ஒரு படி அல்ல, பல படிகள் அண்ணாமலை முன்னே இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆளுங்கட்சியை எதிர்த்து, துணிச்சலுடன் செயல்பட்டால்தான் கட்சி வளரும் என்கிற சூட்சுமத்தை, நன்றாகவே அவர் புரிந்து கொண்டிருக்கிறார். இதனால் கூட்டணி கட்சியான அதிமுகவிடமிருந்து பல நேரங்களில் அவர் ஒதுங்கியும் கொள்கிறார்.
மாநிலம் முழுவதும் சூறாவளியாய் சுற்றி கட்சி நிர்வாகிகளை சந்தித்து அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தை கேட்காமல் கேரள அரசே நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு, கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 3832 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து நடத்துகிறார்.
ஆளும் திமுக அரசு நிர்வாகம் தவறிழைப்பதாக கருதினால் அதை சுட்டிக்காட்டி அவர் போராடத் தயங்குவதும் இல்லை. அது, இந்து சமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பிரபல தனியார் ஸ்வீட் நிறுவனத்திடமிருந்து மட்டுமே இனிப்புகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் என்றாலும் சரி, அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைதை கண்டித்து ஆளுநரை சந்தித்த விஷயமானாலும் சரி திமுக அரசின் மீதான அண்ணாமலையின் தாக்குதல் உக்கிரமாகவே உள்ளது.
தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளையும் கலாய்ப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரசை டயர், டியூப் இல்லாத கட்சி என்று அவர் வர்ணித்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணமும் ஏற்புடையதாக இருந்தது.
திமுகவோடு இணைத்திடுங்க
அப்போது அண்ணாமலை கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முரசொலி பத்திரிகையில் ‘இந்தியாவின் அடுத்த ஆளுமை நம்முடைய தளபதி ஸ்டாலின்தான்’ என்று எப்போது எழுதினாரோ, அப்போதே தமிழக காங்கிரஸ் கட்சி செயலிழந்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரே ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. டயர், டியூப் கூட இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எங்களுக்கு உண்மையான சமூகநீதி என்றால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். உண்மையான சமூகநீதிக்கு வித்திட்டவர் அவர்தான்”என்று கூறியிருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தும் கூட கே.எஸ்.அழகிரியால் இதை மறுத்துப் பேச முடியவில்லை. அவர் மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாராலும் அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க இயலவில்லை.
இப்படி பேசலாமா..?
இந்த நிலையில்தான் அண்மையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,”தமிழகத்தில் காங்கிரஸ் என்று ஒரு கட்சியே கிடையாது. அது திமுகவின் குரலாகவே ஒலிக்கிறது. மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றை புள்ளியில் திமுகவை ஆதரிக்கிறது. எனவே பேசாமல் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியை இணைத்துவிடலாம்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
டயர், டியூப் இல்லாத கட்சி காங்கிரஸ் என்று அண்ணாமலை விமர்சித்தபோது கேஎஸ் அழகிரிக்கு வராத கோபமும், ரோஷமும் திமுகவுடன் காங்கிரசை இணைத்து விடலாம் என்று சொன்னவுடன் வேகமாக வெளி வருவதை காண முடிகிறது. தமிழக பாஜக தலைவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கே எஸ் அழகிரி தனது டுவிட்டரில் அடுத்தடுத்து மூன்று பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில், “கடந்த 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாஜக, 2021 சட்டமன்ற தேர்தலில் 21-ல் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள், இந்நாள் தலைவர்கள் தோல்வியடைந்ததை மறந்து பேசலாமா?…
மக்களவை தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், சட்டப் பேரவை தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வெற்றிபெற்று தமிழக காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலை இத்தகைய குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட முயல்கிறார். வேண்டாம், விபரீதம்” என்று குமுறி உள்ளார்.
கரையும் காங்.,
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் அண்ணாமலை இன்னும், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்ற நினைப்பில், மிரட்டும் தொணியில் பேசுவதாக குறை கூறுகிறார்கள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களால் சரியான பதிலை கூற முடிவதில்லை. அதனால் சில செய்தி சேனல்களின் ஊடகவியலாளர்கள் மூலம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்ப வைக்கின்றனர். அதில் எப்படியாவது அண்ணாமலை சிக்கி விடுவார். அதை வைத்து அவர் மீது எதிர்மறை பிரச்சாரத்தை முன்வைக்கலாம் என்ற நோக்கத்துடன் சில அரசியல் கட்சிகள் இப்படி செயல்படுகின்றன, என்கிறார்கள்.
ஆனால் அவர்களும் கூட தன்னை மடக்க முடியாத அளவிற்கு அண்ணாமலை தக்க பதிலடி கொடுக்கிறார். இன்று திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இணையாக தமிழக பாஜகவின் செயல்பாடுகள் உள்ளது. அதன் வேகமான வளர்ச்சி இன்னொரு தேசிய கட்சியான காங்கிரசை தமிழகத்தில் மெல்ல மெல்ல கரைத்து வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. இதைத்தான் கே எஸ் அழகிரி போன்ற மாநில காங்கிரஸ் தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
கே எஸ் அழகிரி தனக்கு வசதியாக சில தேர்தல் புள்ளிவிவரங்களை கூறுகிறார். 2011, 2016, 2021 என மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிட்டது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் சிறு சிறு கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
அந்தத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக, பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிகளை வென்றன. ஆனால் நாங்கள்தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரசால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை.
தவிர 1989 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு, எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது இல்லை. ஆனால் 1996 தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வென்றிருக்கிறது. தவிர பல தேர்தல்களை தனித்தே சந்தித்தும் இருக்கிறது.
காங்கிரசின் வெற்றி பெரும்பாலும் திமுகவை சார்ந்தே இருக்கிறது. மேலும் ஐந்தாண்டு கால ஆட்சியின்போது, திமுகவுடன் காங்கிரஸ் அப்படியே ஒன்றிப்போய் விடுகிறது. இதன் அடிப்படையில் தமிழக காங்கிரசை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று
அண்ணாமலை
கூறியிருக்கலாம். அதனால்தான் அழகிரிக்கு கடும் கோபம் வருகிறது. அவர் மீது பாய்கிறார்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
0
0