மதிமுகவால் வந்த சிக்கல்… காங்கிரசின் கையை விட்டு போகிறதா திருச்சி தொகுதி…? செல்வப்பெருந்தகை சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 2:36 pm
Quick Share

மக்களவை தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்புள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிதி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது :- பாஜகவின் மக்கள் விரோத செயல்களை மக்கள் அறிவார். அனைத்து அமைப்புகளையும் கையிலெடுத்த பாஜக தற்போது தேர்தல் ஆணையத்தையும் கையிலெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் தலைவரான ஆதிஷ் அகர்வாலா குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறார்.

பாஜக, மோடி, தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி சவாலாக விளங்குகிறது. தேர்தல் பத்திர விவரத்தை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்கிறது. தேர்தல் பத்திர விவரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்தால் 2 மணி நேரத்தில் வெளியிடுவோம்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 30% தான் ஒன்றிய அரசின் நிதி, 70 % தமிழ்நாடு அரசின் நிதி. ஆனால், பாஜக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இன்று அல்லது நாளை தொகுதிகள் அடையாளம் காணப்படும். ஒரு சில தொகுதிகள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது, என தெரிவித்தார்.

திருச்சியில் மதிமுகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு, மதிமுகவும் எங்கள் கட்சி தான், எங்களுக்குள் பேசி அதனை சரி செய்து போட்டியிடுவோம், என தெரிவித்தார். டிடிவி தினகரன் வழக்குகளுக்கு பயந்து சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். அவர் சந்தர்ப்பவாதியாக மாறவில்லை என்றால் ஜெயிலுக்கு போக நேரிடும் என்பதால் பாஜக கூட்டணியில் சேர்ந்து இவ்வாறு பேசி வருகிறார், என பேசினார்.

Views: - 97

0

0