அண்ணாமலையை வைத்து காய் நகர்த்துகிறாரா அமித்ஷா..? அதிமுக தான் முடிவு செய்யனும் ; காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 11:09 am

புதுக்கோட்டை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வைத்து அதிமுகவை அடிபணிய வைக்க திட்டமா…? என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது :- ஊழல் தடுக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்தல்ல, பாஜக அரசு கர்நாடகாவில் இருந்து போது 40 சதவீத ஊழல் ஆட்சி இருந்தது. மக்களால் அந்த ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது சோதனை நடந்ததா..? யாராவது கைது செய்தார்களா? பாஜக ஆளும்‌ மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?

பாஜக அல்லது பாஜக ஆதரவு இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களை முடக்குகின்ற விதத்திலும், மக்கள் தேர்ந்தெடுத்தாலும் ஆட்சியை மாற்றி குறுக்குவழியில் ஆட்சியை பிடிப்பது அல்லது ஆளுபவர்களுக்கு இடையூறு கொடுக்கும் வேலையை பாஜக செய்கிறது. இது அராஜகத்திற்குறியது
ஜனநாயகத்திற்கு விரோதமானது.

அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டு இருந்தால் பாஜக ஆளுகின்ற மாநிலத்திலும், இதுபோன்ற சோதனை நடத்தி இருக்கும். கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கும்.

செந்தில் பாலாஜி கைது விவகாரம் எதிரொலியாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் வராது. மக்கள் பழிவாங்கும் நடவடிக்கை தான் இது என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இது எந்த விதத்திலும் தேர்தலின் போது எதிரொலிக்காது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர, விவேகமாக பேசவில்லை. அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சியினுடைய பிரதான தலைவரை பேசினால் அதிமுகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் பதிலுக்கு பேச தான் செய்வார்கள். அண்ணாமலை நிதானமாக செயல்படவில்லை.

அண்ணாமலை அமித்ஷாவை விட பெரிய தலைவரா? மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாற்றுவது டெல்லி தலைமை எடுக்கவேண்டிய முடிவு. தேசிய கட்சிகளுக்கு மாநிலத்தில் நிரந்தர தலைவர்கள் என்பது இல்லை. டெல்லி தலைமை இப்போது இருப்பவரே தலைவராக இருப்பார் என்று அறிவித்தால், அவருடன் இணைந்து பணி செய்வேன். தனக்கு வாய்ப்பு கொடுத்தால் பாடுபட தயாராக உள்ளேன் அல்லது வேறு யாருக்கும் கொடுத்தார்கள் என்றால் அவருடன் சேர்ந்து பணியாற்றவும், பாடுபடவும் தயாராக உள்ளேன்.

இவ்வளவு தூரம் அண்ணாமலை பேசிய பிறகும், பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டுமா..? என்பதை அதிமுக தான் பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நான் எந்த கருத்தும் கூற முடியாது. பாஜக அண்ணாமலை வைத்து டெக்னிக்காக அதிமுகவிலே அடிபணிய வைக்கிறதா..? அமித்ஷாவின் அனுமதியோடுதான் அண்ணாமலை பேசுகிறாரா..? இதெல்லாம் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!