இப்பவும் சொல்றேன்.. ஓட்டுக்கு பணம் கொடுக்கல… அலர்ட் கொடுத்த அண்ணாமலை… டக்கென வந்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 9:43 pm
Quick Share

ஆரத்திக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ 2023ம் ஆண்டு ஜுலை மாதம் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்ற போது, தட்டுக்கு அடியில் பணத்தை வைத்து கொடுப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார். அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.

பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை ஆட்சியர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், எனக் கூறினார்.

இந்த நிலையில், ஆரத்திக்கு பணம் கொடுக்கும் வீடியோ 2023ம் ஆண்டு ஜுலை மாதம் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளதாகவும், பொய்யான தகவலை பரப்பிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Views: - 114

0

0