கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் புதியவகை கொரோனா பாதிக்கும் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 6:33 pm

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- 3-வது அலை முறியடித்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா தொற்றி அதிகமாக உள்ள நிலையில், இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிர, டெல்லி, கர்நாடக போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் 90 என குறைந்த நிலயில் தற்போது தொற்று 200 அதிகரித்துள்ளது. சென்னையில் 100 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது; பிஏ4 7 பேருக்கும், பிஏ5 11 பேருக்கும் பரவியுள்ளது. தொற்று பாதிப்பு பரவாமல் இருந்த சூழ்நிலையில், தற்போது பரவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. புதிய வகை கொரோனா பாதிப்பு என்கிற நிலை இருக்கும்போது, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளது. இந்த சூழலில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை மறுதினம் நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2ம் தவனை தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை ராணிப்பேட்டை, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டங்களில் குறைவாக உள்ளது. தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்றும் 2.1 கோடி பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபார சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களை அழைத்து வர வேண்டும். மேலும், வல்லுனர்களின் கருத்துப்படி தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் விதிக்க அவசியமில்லை.

ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு உறுதி செய்யப்பட்ட மாணவ மாணவிகளை தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதனால் கல்வி நிறுவனம் சார்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் விடுதி சனிக்கிழமை முதல் மூடப்படும். திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். ஆனால் இந்த சுற்றறிக்கை குறித்து நிறுவனம் சார்பில் அரசிடம், சுகாதாரத்துறையிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஓர் முடிவு. இதனால் பொது சுகாதாரத்துறை சார்பில் இந்த சுற்றறிக்கையை நடைமுறைபடுத்த கூடாது.தொடர்ந்து வகுப்புகள் செயல்படுத்த வேண்டும். விடுதியில் இருந்து மாணவர்களை வெளியேற்ற கூடாது, எனவும் தெரிவித்தார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!