அமைச்சருடன் நடிகை கஸ்தூரி மோதல்…? மின்வெட்டு பற்றி தொடர்ந்து விமர்சனம்

Author: Babu Lakshmanan
5 August 2021, 2:03 pm
Kasthuri - senthil balaji - updatenews360
Quick Share

தமிழகத்தில், இந்த ஆண்டில் மே மாதத்துக்கு முன்பு மின்வெட்டு என்பது மிகவும் அபூர்வம்.
இந்த நிலையில்தான் மே 7-ம் தேதி திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு பரவலாக காணப்பட்டது. நகர்புறங்களில் குறைந்தபட்சம்
3 மணி நேரமும், புறநகர் பகுதிகளில் 4 மணி நேரமும் கிராமப்பகுதிகளில் 5 மணி நேரமும் மின்வெட்டு என்பது சர்வ சாதாரண நிகழ்வாக இருந்தது.

காரணமான அணில்

அதிமுக ஆட்சியின்போது 9 மாதங்களாக மின் கம்பங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது, அடுத்த 10 நாட்களுக்குள் அது
சரி செய்யப்பட்டு விடும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
ஆனாலும் மே மாதம் முடிந்தும், ஜூன் மாத இறுதிவரை மின்வெட்டு என்பது தொடர்கதையாக இருந்தது.

Senthil Balahi- Updatenews360

அப்போது, இந்த மின்வெட்டுக்கு அணில்களும், பெருச்சாளிகளும் காரணம் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி, சில ஆதாரங்களுடன் கருத்து தெரிவித்து இருந்தார்.

இது வலைத்தளவாசிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சரை கேலி பேசினர்.

துணிச்சலான கஸ்தூரி

சமூக நல ஆர்வலரான நடிகை கஸ்தூரி, கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் நாட்டு நடப்பு குறித்து தன் மனதில் பட்ட கருத்துகளை துணிச்சலுடன் பதிவு செய்து வருகிறார்.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக
விசிக, என கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் அவர் வறுத்தெடுக்கிறார்.
அதேநேரம், சாதனையாளர்களுக்கு தனது ட்விட்டர் பதிவுகளில் உடனுக்குடன் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.

kasthuri - updatenews360

டுவிட்டரில் 10 வருடங்களாக உள்ள 47 வயது கஸ்தூரி இதுவரை 25 ஆயிரம் ட்விட்களை பதிவு செய்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அவருடைய பதிவுகளுக்கு சிலர் அவ்வப்போது கடுமையான எதிர் விமர்சனங்கள் வைப்பதையும் காண முடிகிறது. அவரை தரம் தாழ்ந்தும், இழிவுபடுத்தியும் கருத்துகளை பதிவு செய்வதும் உண்டு. ஆனால் அதையெல்லாம் அவர் சட்டை செய்வதில்லை.

அணிலா? அணில் கும்ப்ளேவா?

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டையும் அவர் விட்டு வைக்கவில்லை.

ஜூன் மாதம் 23-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அணில்பாலாஜி என்று ஹேஸ்டேக் செய்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “செல்லூர் ராஜுவின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டனர். கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கரண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு !

அது என்ன அணிலா? அணில் கும்ப்ளேவா? ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு ! அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு ? அணில் என்ன அவாளா ? அநியாயமா பழிபோடறதுக்கு? கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க, எவ்வளோ பெரியார் அரசியல் பாருங்க ! என்று கிண்டலடித்து இருந்தார்.

அதுமட்டுமல்ல,பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், எம் ஆர் காந்தி திமுக முன்னாள் எம்எல்ஏ சுரேஷ்ராஜன் ஆகியோரை அவதூறாக பேசிய குமரி மாவட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கஸ்தூரி ட்விட்டர் பதிவில் கடுமையாக கலாய்த்தார்.

அந்தப் பாதிரியார், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கோரியபோது, தனது ஆவேசத்தை நச்சென்று பதிவு செய்தார். “அது எப்படி இந்த அரசியல்வாதிகளுக்கு, கிரிமினல்களுக்கு, தேசத்துரோகிகளுக்கு எல்லாம் குற்றம் செய்யும்போது சூப்பரா வேலை செய்யுற இதயம் சரியாய் அரெஸ்ட்டு சமயத்துல மட்டும் நெஞ்சு வலி வந்துருது? இந்த மாதிரி தேசத் துரோகிகளுக்கு கருணையே காட்டக் கூடாது” என்று அதில் உணர்ச்சிப்பூர்வமாக கொந்தளித்து இருந்தார்.

அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய கஸ்தூரி

இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் பரவலாக மீண்டும் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளில் அதிகபட்சமாக 4 மணி நேரமும், புறநகர் பகுதிகளில் 5 மணி நேரமும் கிராம பகுதிகளில் 6 மணி நேரமும் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்தின் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த மின்வெட்டால் நடிகை கஸ்தூரியும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவர் சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மூலம் தெரிய வருகிறது.

senthil balaji - updatenews360

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “திரும்பவும் கரண்ட் கட் தொடங்கிவிட்டது. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து மின் சப்ளை இல்லை. சென்னையைச் சுற்றியிருப்போர், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், இங்கு கரண்ட் கட் ஆகிறது. உங்க ஏரியாவில் எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ள கஸ்தூரி, இந்த ட்வீட்டை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் ‘டேக்’ செய்து இருக்கிறார்.

அவர் தொடர்ந்து தமிழக மின் வாரியம் மற்றும் மின் துறை அமைச்சர் மீது டுவிட்டரில் அதிரடியாக கருத்துகளை பதிவு செய்வது சமூக வலைதளவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

நடிகை கஸ்தூரி சமூக நலன் சார்ந்த விஷயங்களில் மிகவும் அக்கறையுடன் துணிச்சலாக செயல்படுவதாக அவர்கள் பாராட்டுகின்றனர். அதேநேரம் இதற்காக அவரை வசைபாடுபவர்களும் ஏராளம்.

தடுமாறும் பெற்றோர்கள்

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம். மாநிலம் முழுவதுமே பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் பூமி குளிர்ந்து நிலையில் இருக்கிறது. மேலும் கடுமையான கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் முடிந்துவிட்டன. வழக்கமாகவே கோடைகாலம் முடிந்துவிட்டால் தமிழகத்தில் மின் நுகர்வு சற்று குறைந்துவிடும். தற்போது தமிழகத்தில் மழை காலம் என்பதால் மின் பயன்பாடு இன்னும் குறைந்திருக்கும். எனவே மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும் மின்துறை அமைச்சர் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். மின்கம்பங்களில் படர்ந்திருந்த செடிகொடிகள், மரக் கிளைகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியிருந்தும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை எப்படி மின்வெட்டு ஏற்படுகிறது என்பது புரியவில்லை. ஆனால் அமைச்சரோ தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் அதை தகர்க்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்குத்தான் உள்ளது. குறிப்பாக மின்சார வாரியத்தின் நிர்வாகத் திறனை மேம் படுத்தவேண்டும்.

power cut 4 - updatenews360

வீட்டில் குடும்பத் தலைவிகள் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், மிக்ஸி கிரைண்டர்களை பயன்படுத்தும்போது திடீரென மின்சாரம் தடைபட்டால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகி விடுகின்றனர். இதனால் சமையல் தாமதமாவது மட்டுமன்றி, அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் நள்ளிரவு நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபடும்போது, திடுக்கிட்டு எழும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் தடுமாறுகின்றனர். இதனால் ‘இன்வெர்ட்டர்’ வாங்கக்கூடிய நிலைமைக்கு மீண்டும் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எல்லோரிடமும் இன்வெர்ட்டர் வாங்கக் கூடிய அளவிற்கு வசதி இருக்குமா? என்பது சந்தேகம்தான்.
எனவே நடிகை கஸ்தூரி போன்ற சமூக ஆர்வலர்கள் மின்வெட்டு தொடர்பாக வைக்கும் கிண்டல் பதிவுகளை ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக கருதி தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் ஒரே எதிர்பார்ப்பு. ஏனென்றால் நீண்ட நேர மின்வெட்டு என்பது தொழில் துறையையும் வெகுவாக பாதிக்கும். எனவே மாநிலத்தில் மின்வெட்டே இல்லாத நிலைமையை ஏற்படுத்தவேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Views: - 382

0

0