சாட்சிகளுக்கு ஆபத்து.. அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு… செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 5:52 pm
senthil
Quick Share

சாட்சிகளுக்கு ஆபத்து.. அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு… செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம் அமர்வில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு கடந்த திங்கள் கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தனர். இதைதொடந்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த நாளான 9-ம் தேதி (அதாவது செவ்வாய் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் 12-ஆம் தேதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறி நீதிபதி அல்லி வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்க வாய்ப்புள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு நேற்று மீண்டும் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 15-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 197

0

0