அன்று எம்ஜிஆர் செய்ததை இன்று இபிஎஸ் செய்து காட்டுவார்… அதை யாராலும் தடுக்க முடியாது : திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

Author: Babu Lakshmanan
21 January 2023, 11:21 am
Quick Share

திண்டுக்கல் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வருவார்கள் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல் என் ஜி ஓ காலனியில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:- திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஆற்றிய பின்பு தேசிய கீதம் பாடப்படும். அதற்கு பிறகு தான் அவர் வழி அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், சட்டமன்றத்தில் ஆளுநர் பேசி முடித்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து பேசினார்.

ஆளுநருக்கு தமிழ் தெரியாது என்பதால் பாதுகாவலரை அழைத்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு, அதன் பின்னர் தனக்கு எதிராக பேசுகிறார் என தெரிந்து சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். வெளியில் சபாநாயகர் பேட்டி கொடுக்கும்போது, ஆளுநர் தேசிய கீதத்தை அவமானப்படுத்தி சென்று விட்டார் எனக் கூறினார். ஆனால் ஆளுநர் காருக்கு சென்றபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அவர் காருக்கு வெளியில் நேராக நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு தான் காரில் புறப்பட்டு சென்றார். ஆனால், அதைப் பார்க்காமல் கூட சபாநாயகர் ஆளுநரை குறை சொல்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஸ் இளங்கோவன் மகன் இறந்துவிட்டார். எல்லோரும் வருத்தப்பட்டோம். அதிமுக சார்பில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் அனுதாபம் தெரிவித்து வந்தனர். இறந்து ஐந்து நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காமராஜர் விருதை வழங்குகிறார்.

மகனின் சமாதியில் ஈரம் கூட காயாமல் இருக்கும் நிலையில் அந்த விருதைப் பெற்ற இவிகேஎஸ் இளங்கோவன் சிரித்துக்கொண்டிருக்கிறார். கருமாதி செய்யக்கூட ஒரு வாரம், 15 நாட்கள் ஆகும். ஆனால், அதற்குள் காமராஜர் விருதை ஸ்டாலின் கொடுக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்று வாங்குகிறார்.

அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?. எடப்பாடி தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என பல்வேறு பத்திரிகைகளில் எழுதி கொண்டு வருகின்றனர். அதை பார்த்து இந்த தேர்தலை உடனே அறிவித்துள்ளனர்.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம் திண்டுக்கல் இடைத்தேர்தலில் எப்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாபெரும் வெற்றி பெற்றார். அதுபோல, இன்றைக்கு உண்மையான அதிமுக எடப்பாடி தலைமையில் தான் உள்ளது என்பதை நிரூபிக்க ஸ்டாலின் அருமையாக வழி காட்டி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எடப்பாடி தலைமையிலான வெற்றி பெறுவதை ஸ்டாலின் அல்ல, வேறு யாராலும் தடுக்க முடியாது.

அவ்வாறு வெற்றி பெற்றதற்கு பிறகு நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வருவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக ஆக வேண்டும் என அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும், என்று பேசினார்

Views: - 389

0

0