திமுகவினரின் பினாமிகளை பதற வைத்த DMK FILES-2… அண்ணாமலை போட்ட அடுத்த குண்டு…!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 9:10 pm
Quick Share

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று DMK FILES என்னும் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோவாக வெளியிட்டு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 12 பேர் ஊழல் செய்து சேர்த்ததாக கூறப்படும் சொத்து பற்றிய விவரங்கள் முழுமையாக இடம் பெற்றிருந்தது.

அந்த வகையில், ஜெகத்ரட்சகன் எம்பிக்கு அதிக பட்சமாக 50,219 கோடி ரூபாயும் எ.வ.வேலுவுக்கு 5,552 கோடி, கே.என்.நேருவுக்கு 2,495 கோடி, கனிமொழிக்கு 830 கோடி,
கலாநிதி மாறனுக்கு 12,450 கோடி, டி.ஆர்.பாலுவுக்கு 10,841 கோடி,
கதிர் ஆனந்த்துக்கு 579 கோடி, கலாநிதி வீராசாமிக்கு 2,923 கோடி, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி இருவருக்கும் 581 கோடி, அன்பில் மகேஷ்க்கு 1,023 கோடி, உதயநிதி 2,039 கோடி மற்றும் சபரீசனுக்கு 902 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளது.

தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு 3,474 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் சொத்து மதிப்பு 34,184 கோடி என திமுகவினரின் மொத்த சொத்து மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது தவிர முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2011ம் ஆண்டு திமுகவின் தேர்தல் நிதியாக
200 கோடி ரூபாய் ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான இன்னொரு தகவலையும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோதே, இது முதல் பாகம்தான். இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும். அதில் திமுக அமைச்சர்கள் தங்களின் பினாமிகள் மூலம் சேர்த்த நிலம், சொத்துகள், கறுப்பு பணம் போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும் என்றும் அதிரடி காட்டினார்.

அண்ணாமலை திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட உடனேயே அதற்கு மறுப்பு தெரிவித்து, டி. ஆர். பாலு, உதயநிதி, கனிமொழி, கலாநிதி வீராசாமி போன்றவர்கள் பொங்கி எழுந்தனர். அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடர்வோம் என்று கூறி வக்கீல் நோட்டீசும் அனுப்பினர். ஆனால் கடைசியில் டி ஆர் பாலு தவிர வேறு யாரும் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை ஜூலை 26ம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் கிண்டி ராஜ் பவனில் அண்ணாமலை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். அப்போது திமுகவினரின் முறைகேடுகள் குறித்த DMK FILES இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார். அது தொடர்பான ஆதார ஆவணங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பெட்டியில் வைத்து ஆளுநர் ரவியிடம் அளிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் டாஸ்மாக் மதுபான விற்பனையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 75 சதவீதம் குறைத்திடவும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி ஈடு கட்டுவது என்பது பற்றியும்பாஜக சார்பில் தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக பூச்சி மருந்து கொள்முதல் செய்வதில் பிரபல நிறுவனத்தின் பெயர் ஒன்றை போலியாக பயன்படுத்தி 600 கோடி ரூபாய் ஊழல், சென்னை ஒன் மென் பொருள் நிறுவனத்தின் அரசு பங்குகளை 95.4 சதவீதம் தனியார் மயமாக்கி 3000 கோடி ரூபாய் மோசடி, கனரக வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வாங்குவதில் 2000 கோடி ரூபாய் முறைகேடு என்று மொத்தம் 5600 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலை அண்ணாமலை கடத்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க நாடுகளில் அவர் கட்சி ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் திட்டமிட்டபடி அப்போது வெளியாகவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து இரண்டாவது பட்டியலை அவர் வெளியிட்டிருந்தாலும் கூட, இதிலும் தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு பல ரகசிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

அதில் திமுகவின் ஒன்பது அமைச்சர்கள் தங்களின் பினாமிகள் மூலம் சேர்த்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய விரிவான விவரங்களும் இடம் பெற்றிருந்தது.

அண்ணாமலை வெளியிட்ட இந்த பினாமி சொத்து பட்டியலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

“திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் போன்றோர் குவித்துள்ள சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோது, இவை எல்லோருமே தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததுதானே இதில் புதிதாக என்ன இருக்கிறது? என்று ஏளனமாக பேசியவர்களே அதிகம். ஆனால் அடுத்து நடந்ததைக் கண்டு அலறாத திமுகவினரே கிடையாது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கான காரணங்களையும் அவர்கள் அடுக்குகிறார்கள்.

“சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி, அவருடைய மூத்த மகன் கௌதம சிகாமணி எம்பி இருவருக்கும் சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன.

குறிப்பாக, பொன்முடி வங்கிகளில் வைப்புத் தொகையாக 42 கோடி ரூபாய் போட்டு வைத்திருப்பதை கண்டுபிடித்து அதை அமலாக்கத் துறை முடக்கவும் செய்தது. அதேபோல அவருடைய வீட்டில் இருந்து கணக்கில் காட்டப் படாத 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் கைப்பற்றியது.

இதுதவிர இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் 100 கோடி ரூபாய் அளவிற்கு கௌதம சிகாமணி தொழில் முதலீடு செய்திருப்பதையும் அம்பலப்படுத்தியது.

இதிலிருந்து அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் முதல் சொத்து பட்டியல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவதை நிரூபிப்பதாக உள்ளது. அதனால்தான் அடுத்து அமலாக்கத்துறையினர் அமைச்சர்கள் கே என் நேரு, எ.வ.வேலு ஆகியோரின் வீடுகள் அலுவலகங்களில் அதிரடி சோதனையில் இறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்தவரை, அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து அவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கரூரில் அசோக்குமாரின் மனைவிக்கு எப்படி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் 11 லட்ச ரூபாய்க்கு தானமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வியின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையுடன் இதை தொடர்பு படுத்தி தீவிர விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.

இவற்றையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்த்தால் அண்ணாமலை எஃபெக்ட் நன்றாகவே வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்
எனவே அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவினரின் பினாமி சொத்துக்கள் பற்றிய DMK FILES இரண்டாம் பாகமும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை “என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுவும் ஒரு விதத்தில் நம்பத் தகுந்த ஒன்றாகத்தான் உள்ளது.

Views: - 245

0

0