திமுக வாரிசுகளுக்காக தொகுதிகள் குறைப்பா…? திமுக போடும் தேர்தல் கணக்கு…? கதறும் காங். கதர் சட்டைகள்!

Author: Babu Lakshmanan
8 March 2024, 9:16 pm
Quick Share

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக அமைச்சர்களின்
வாரிசுகள் 10 பேருக்கும் குறையாமல் களமிறக்கப்படுவார்கள் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபட்டு வந்தது.

அதை உண்மை என்று கூறுவது போல ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும், தற்போது கூடுதலாக இன்னும் சிலருடைய வாரிசுகளும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது, தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக சீனியர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியிலும், அமைச்சர் எ வ வேலுவின் மகன் டாக்டர் கம்பன் திருவண்ணாமலை அல்லது கள்ளக்குறிச்சியிலும், அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் பெரம்பலூர் அல்லது திருச்சியிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சியிலும், சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் நெல்லைத் தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அறிவாலயத்தில் விண்ணப்பித்தும் உள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று
அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தாலும் கூட தற்போது கட்சி தலைமையிடம் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து கொடுத்திருப்பதால் அது 100% உறுதியாகிறது.

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ஒரு மாநில கட்சியில் மிக அதிக அளவில் தந்தையும், மகனும் எம் பி, எம்எல்ஏ அல்லது அமைச்சர் பதவியில் இருப்பது திமுகவில் மட்டும்தான் என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரியும் ஒன்று.

இதனால் திமுகவில் கடந்த மூன்று தலைமுறைகளாக குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

இந்த நிலையில்தான் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு வரும் தேர்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் சென்ற தேர்தல் போல ஒன்பது பிளஸ் ஒரு ராஜ்யசபா எம்பி வழங்கப்பட மாட்டாது. ஏழு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும் அதனால்தான் இதுவரை அதிகாரப்பூர்வ இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு இன்னொரு காரணம் முக்கிய பின்னணியில் இருப்பது, தற்போது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பாக, திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நிபந்தனை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதில் கூட்டணி கட்சிகள் எல்லாவற்றுக்கும் இனி சுழற்சி முறையில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படும். இது திமுகவிற்கும் பொருந்தும் என்று அறிவாலயம் அதிரடி காட்டியது. ஒருவர் ஒரே தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிடுவதை தவிர்ப்பதற்காக இந்த சுழற்சி முறை திட்டம் கொண்டு வரப்படுவதாக திமுக தரப்பில் அப்போது அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

எனினும் இதற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளிடம் லேசான முணுமுணுப்பு சத்தம் எழுந்தது. தற்போது இந்த சுழற்சி முறை திட்டத்தை திமுக கொண்டு வந்ததற்கான காரணமே காங்கிரசுக்கு தொகுதிகளை குறைப்பதற்காக இருக்குமோ என்ற சந்தேகம் பொதுவெளியில் எழுந்துள்ளது.

குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளையும் தோல்வி அடைந்த தேனியையும் அக்கட்சிக்கு மீண்டும் திமுக ஒதுக்க விரும்பவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

இதில் இரண்டு தொகுதிகளை கட் செய்து விட்டால் காங்கிரசால் ஏழு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஒருவேளை திமுக தலைவர் ஸ்டாலின் மனது வைத்தால் வேறு இரண்டு தொகுதிகள் காங்கிரஸுக்கு கொடுக்கப்படலாம்.

அமைச்சர் நேருவின் மகன் முதலில் பெரம்பலூர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் திருச்சியில் போட்டியிடுவதற்கும் விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கிறார். இதனால் தற்போதைய காங்கிரஸ் எம்பியான திருநாவுக்கரசர் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்துக்கு மாறலாம் என்று அவர் கணக்கு போட்டால் அந்த தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இதனால் திருநாவுக்கரசர் பாடு படு திண்டாட்டம் ஆகிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மிகவும் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளே போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதேபோல கார்த்தி சிதம்பரம் தங்களை ஒருபோதும் மதித்து நடந்து கொள்வதில்லை. அதனால் அவருக்கு சிவகங்கையை ஒதுக்கினால் நமது கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது கடினம். அதனால் கார்த்தி சிதம்பரம் வேண்டவே வேண்டாம் என்று சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் அறிவாலயத்திடம் தங்களது மனக்குமுறல்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப்பிற்கு தொகுதியை ஒதுக்கினால் அவருக்கு வெற்றி எளிதில் கிடைக்கும் என்றும் கூறி திலீப் பெயரில் விருப்பம் மனுக்களை சமர்பித்தும் உள்ளனர். இதனால் கார்த்தி சிதம்பரமும்
சிவகங்கை தொகுதியில் தேர்தலை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இதேபோல் விருதுநகர் தொகுதியிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என்று
அந்த மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மாணிக்கம் தாக்கூர் எம்பி ராகுல் காந்திக்கு மிகுந்த நெருக்கமானவராக இருப்பதால் தொகுதி பக்கமே அதிகம் எட்டிப் பார்ப்பதில்லை, மக்களின் குறைகளையும் அவர் கேட்டதில்லை. ஒரு சில அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார். எனவே விருதுநகர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கினால் திரும்பவும் அவரே போட்டியிடும் நிலை ஏற்பட்டு விடும். அவருடன் திமுக நிர்வாகிகள் இண்க்கமாக செயல்படுவார்களா என்பதே சந்தேகம்தான் என்று மாணிக்கம் தாகூருக்கு எதிராக அவர்கள் வரிந்து கட்டுகின்றனர்.

அதேபோல சென்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வி கண்ட தேனி தொகுதியை மீண்டும் அக்கட்சிக்கு ஒதுக்க திமுக விரும்பவில்லை. இதனாலும் காங்கிரசுக்கு தானாகவே தொகுதிகள் குறையும் நிலை உருவாகிவிட்டது.

இது போன்ற சூழலில்தான் காங்கிரஸுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்குவதே மிக அதிகம் என்று திமுக தலைமை கருதுகிறது.

மேலும் கடந்த தேர்தலின் போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அதனால் அதன் கூட்டணிக்கு அதிக வெற்றியும் கிடைத்தது. இப்போதோ திமுக ஆளும் கட்சியாக உள்ளது.

சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு,போதைப் பொருள் தாராள நடமாட்டம், திமுகவினரின் நில அபகரிப்பு, அத்துமீறல்கள்,, டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கம் போன்றவை காரணமாக திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதால் 12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வி காணும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இதனால்தான் காங்கிரஸுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க திமுக பெரிதும் தயங்குகிறது. அதேபோல் கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக விரும்பவில்லை என்பதும் உண்மை.

ஏனென்றால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டால் அது பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே ஏற்படலாம் என்று திமுக தலைமை கருதுகிறது. மேலும் 2026 தமிழக தேர்தலை சந்திப்பதற்கு 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார்.

அதனால்தான் தொகுதி சுழற்சி முறை திட்டத்தையும் திமுக கையில் எடுத்திருக்கிறது. இதற்கு பலன் கிடைக்குமா? என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.

Views: - 104

0

0