பிரதமர் மோடிக்கு காந்தி-னு நினைப்பு… 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்ல ; திண்டுக்கல் சீனிவாசன்

Author: Babu Lakshmanan
8 March 2024, 9:37 pm
Quick Share

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மகளிர் தின விழா சிறப்பு மருத்துவ முகாமில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் கடந்த 33 மாதம் ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? தீமை கிடைத்திருக்கிறதா? என்ற பட்டிமன்றத்தில் தீமை தான் கிடைத்திருக்கிறது.

விலைவாசி மலை போல ஏறியிருக்கிறது. மக்கள் சொல்லா துயரத்தில் மாட்டியிருக்கிறார்கள். எனவே தீமையான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவும், மத்தியிலே தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரம் ஏறியிருக்கிறது. கேஸ் விலை ஏறியிருக்கிறது. அதைப்போலவே மத்திய அரசாங்கத்திற்குட்பட்ட அத்தனை விலைகளையும் உயர்த்திவிட்டு, இன்றைக்கு நான் தான் மகாத்மா காந்தி என்பதைப் போல, நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி எல்லா இடங்களிலும் பேசி வருகிறார்.

10 வருட காலம் ஆட்சியில் இருக்கிற நரேந்திர மோடி ஆட்சியிலே மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இன்றைக்கு ரயில்களில் புதுமையாக வடிவமைத்துவிட்டு அதற்கு பல்வேறு பெயர்கள் வைத்து டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ளையடித்து வருகின்றனர். 500 ரூபாய்க்கு சென்னைக்கு பயணம் செய்து வந்ததை இன்று ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது புது கொள்ளை.

தொழில் அதிபர்களிடம் நன்கொடையாக தேர்தல் பத்திரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடியை வாங்கியுள்ளனர். எஸ்பிஐ வங்கி கணக்கை கேட்டால் தராமல் காலம் தாழ்த்தி ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கொடுங்கள், அப்போதுதான் லிஸ்ட் எடுக்க முடியும் என்று சொல்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு மணி நேரத்தில் பட்டனை தட்டினால் இந்தியா முழுவதும் யார் யாருக்கெல்லாம் பணம் செய்து வந்துவிடும் என்று கூறுகின்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கு யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மறைப்பதற்காக ஜூன் மாதம் 30 ஆம் தேதி தருகிறோம் என்று சொல்லி வருகிறது. மத்திய அரசு முகத்திரையை கிழிப்பதற்கு அரசியல் ஆண்மை இல்லாததை காட்டுகிறது. இந்தியாவின் மத ஒற்றுமையை பாதுகாக்காமல் மதப் பிரிதியை உருவாக்குகிற சூழ்நிலையை மத்திய அரசாங்கம் செய்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எந்தெந்த வகையில் தொல்லை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் எல்லாம் நசுத்துகிறார்கள். எனவே பிஜேபி கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியது, எனக் கூறினார்.

Views: - 102

0

0