திமுக எம்பியின் திகைக்க வைக்கும் வரி ஏய்ப்பு! ED பிடியில் சிக்குகிறாரா?…

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 9:42 pm
ED - Updatenews360
Quick Share

முன்னாள் மத்திய அமைச்சரான திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், நட்சத்திர விடுதிகள் என மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறை அதிரடி ரெய்டில் இறங்கியபோது, இதெல்லாம் அவர் முன்பு எப்போதும் சந்திக்காத ஒன்றா?…அவர் பார்க்காத அமலாக்கத் துறையா?…என்று அவருக்கு ஆதரவாக திமுகவினர் ஏளனமாக பேசியதுதான் அதிகம்.

“வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள் மாதிரி ரெய்டு நடக்குது” என்று அமைச்சர் உதயநிதியும் தன் பங்கிற்கு கிண்டல் அடித்திருந்தார்.

ஆஜராகாத ஜெகத்ரட்சகன்

வழக்கமாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினால் அடுத்த மூன்று, நான்கு நாட்களில் சோதனை நடத்திய இடங்களில் என்னென்ன சிக்கியது என்பது பற்றி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் சுருக்கமாக பதிவிடுவதுடன், ஊடகங்களுக்கு விரிவான செய்திக் குறிப்பாகவும் அனுப்பி வைப்பார்கள்.

ஆனால் ஜெகத்ரட்சகன் எம்பிக்கு தொடர்புடைய மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனை பற்றி 10 நாட்களுக்கு மேலாகியும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே கடந்த 14ம் தேதி தங்களது சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இதனால் IT நடத்திய திடீர் ரெய்டில் அப்படி என்னதான் சிக்கியது என்ற எதிர்பார்ப்பு பொதுவெளியில் எகிறியது.

இப்படியும் வரிஏய்ப்பு செய்ய முடியுமா?

இந்த நிலையில்தான் அக்டோபர் 18ம் தேதி இரவு டெல்லியில் இருந்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதை படிக்கும்போது, இப்படியெல்லாம் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியுமா?… என்ற ஆச்சரியம்தான் அனைவரிடமும் எழும். வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அந்தச் செய்தி குறிப்பில் முக்கியமான தகவல்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

“சோதனையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் கல்வி கூடங்களில் பெரும் அளவில் வருமான வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. உதிரியான கணக்குத் தாள்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.

கல்விக் கட்டணத்தை கணக்கில் காட்டாமலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது போலவும் போலியாக கணக்கு காட்டி இருக்கின்றனர். குறிப்பாக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தில் ஒரு பகுதியை கணக்கில் காட்டவே இல்லை.
மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதுபோல போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வகையில் 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டப்படாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. 25 கோடி ரூபாய்க்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக போலிக்கணக்கும் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கல்வி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இடைத்தரகர்கள் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடந்ததும், அதற்காக அவர்களுக்கு 25 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல மதுபான ஆலையில் 500 கோடி ரூபாய் அளவுக்கு போலியாக செலவு கணக்கும் காட்டப்பட்டு இருக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக கணக்கில் வராத இந்த பணத்தை வேறு வழிகளில் வரவு வைத்து பணமாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

அறக்கட்டளைகளில் இருந்து அறங்காவலர்களுக்கு தனிப்பட்ட செலவாகவும், வணிக முதலீடாகவும் 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு நிறுவனம் ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்குவதற்காக அறக்கட்டளை வழியே பணப் பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

100 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 32 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

வருமான வரித்துறை வெளியிட்ட இந்த தகவலின்படி பார்த்தால், ஜெகத்ரட்சகன் எம்பி, தான் நடத்தி வரும் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 25க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மூலம் மொத்தம் 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே 2020-ல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அப்போது வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி
89 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

காத்திருக்கும் அபராதம்

பொதுவாக வருமானவரித் துறையை பொறுத்தவரை, வரிஏய்ப்பு செய்திருந்தால் அதற்குரிய அபராத தொகையை கட்டவேண்டிய நெருக்கடிதான் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும். சிலர் அந்த அபராத தொகையை செலுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் ITயிடம் கேட்டு பெற்றுக் கொள்வார்கள்.

குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப வரி ஏய்ப்பு அபராதம் கடுமையாக இருக்கும். வரி செலுத்துவோர் தங்கள் வருவாயை மறைக்க முயன்றால், 1961ன் வருமான வரிச் சட்டத்தின் 271 C பிரிவின்படி ஏய்க்கப்பட்ட வரியில் 100 சதவீதம் அல்லது 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். 

வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்தால், பிரிவு 276 Cயின் கீழ் அவர்களிடமிருந்து 25 லட்ச ரூபாய் அல்லது குறைந்தபட்சம் ஆறு மாதங்களோ அல்லது அதற்கு மேற்பட்ட காலமோ சிறைத்தண்டனை விதிக்கப்படவும் செய்யலாம்.

ஆனால் பெரும்பாலான தொழிலதிபர்கள், தங்களது கை தேர்ந்த பிரபல ஆடிட்டர்கள் மூலம் சிறைத்தண்டனை கிடைக்காத அளவிற்கு பார்த்துக்கொண்டு விடுவார்கள். அதனால் ஜெகத்ரட்சகன் எம்பி அபராத தொகை மட்டும் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படலாம்.

அதேநேரம் அடுத்து அவர் அமலாக்கத்துறையின் விசாரணை வடையத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே தென்படுகின்றன.

காரணம் வருமானவரித் துறையிடம் சிக்கிய பிரதான ஆவணங்களில் ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கு அறக்கட்டளை வழியே பணப் பரிவர்த்தனை செய்தது தெரிய வந்திருப்பதுதான். இதை சட்டவிரோத பண பரிவர்த்தனை என்ற அடிப்படையில் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம், IT அதிகாரிகள் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். எனவே வரி ஏய்ப்பு விவகாரத்தில் அபராதத் தொகையை கட்டிவிட்டு ஜெகத்ரட்சகன் நழுவ நினைத்தாலும் இந்த ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொள்வார் என்பது நிச்சயம், என்கிறார்கள்.

“1250 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கு 100 அல்லது 300 சதவீதமோ அபராதம் என்பதெல்லாம் ஜெகத்ரட்சகனுக்கு வெறும் ஜூஜூபிதான்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகள், மதுபான ஆலைகள், நட்சத்திர விடுதிகள் என்று 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஜெகத்ரட்சகன் நடத்தி வருகிறார். இந்த அளவிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் எம்பியாவது இத்தனை நிறுவனங்களை நடத்துவார்களா? என்பது சந்தேகம்தான்.

இவற்றின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இதனால் அவருக்கு ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் அபராதம் என்பதெல்லாம் கால் தூசுக்கு சமமான ஒன்றாகத்தான் இருக்கும்.

இந்த நிறுவனங்களை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வெவ்வேறு நபர்கள் மூலம் நடத்தி வந்தாலும், அவர்களில் பெரும்பான்மையானோர் அவருடைய பினாமிகளாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அவர் 35 ஆண்டுகளாக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதனால் அவர் முறைகேடாக சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பலர் அவருக்கு ஆதரவாக பேசினாலும் கூட இத்தனை ஆண்டுகளில் ஒருவர் நேர்மையான முறையில் சில லட்சம் கோடி ரூபாய்களை தனி ஒருவராகவே சம்பாதித்து இருக்க முடியாது என்ற விமர்சனங்களும்
வைக்கப்படுகின்றன.

அதனால்தான் அவர் திமுகவுக்கு தேர்தல் நேரங்களில் 400 கோடி 450 கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிறார் என்றும் கூறுகிறார்கள். வருமானவரித் துறையின் அதிரடி ரெய்டு மூலம் அவருடைய ஆண்டு வருமானத்திற்கு தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதுவும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஜெகத்ரட்சகனின் நிறுவனங்களில் 1250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, அவர் சார்ந்த திமுகவுக்கும் பாதகமான நிலையைத்தான் ஏற்படுத்தும். அதனால்தான் இப்போது அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட வேறு எந்த அமைச்சரும் இது பற்றியே பேசுவதில்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அடுத்து அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துவிடுவார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Views: - 362

0

0