தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆள வேண்டும்.. கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 6:23 pm
CM Stalin - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் நடைபெற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த 16,978 திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற, வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரம் நிறைந்த ராமநாதபுரம் மண்ணில் நாம் கூடியிருக்கிறோம். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டமாக மாறியுள்ளது.

5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது திமுக அரசு. பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தை முன்மாதிரி மாவட்டமாக்கியது திமுக அரசு தான். பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோயில் தேரை ஓட வைத்தது திமுக அரசு தான் என முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகே வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் முதல்வர் உரையில், மத்தியில் ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்டது முக்கிய கட்சி திமுக தான். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி முகவர்கள் தான் என வாக்குச்சாவடி முகவர்களின் கடமைகளை பட்டியலிட்டு பேசினார்.

அதில், திமுகவின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தான் வரும் தேர்தலில் வெற்றி வீரர்கள். 19 மாவட்டங்களில் இருந்து 14,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் பல பிரதமர்கள், குடியரசு தலைவர்களை உருவாக்கியது திமுக அரசு.

மீண்டும் ஒரு வரலாற்று கடமையாற்ற காலம் நம்மை அழைக்கிறது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக சீரழித்துவிட்டது.

ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா பிரதமர் மோடி என கேள்வி எழுப்பினார். இதுபோன்று, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார், ஆனால் போடவில்லை.

தமிழ்நாட்டுக்கு தந்த வாக்குறுதிகளை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிப்பேன் என்று சொன்னார் அதை செய்தாரா பிரதமர் எனவும் அடுக்கான கேள்விகளை முதல்வர் எழுப்பினார்.

மேலும், பாஜக ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெண்டர் விடவே 9 ஆண்டுகாலம் ஆக்கியுள்ளது மத்திய அரசு எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்காக சில நிமிடங்கள் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் பேசியுள்ளார். திமுக உண்மையை பேசினால் பிரிவினை வாதம் பேசுவதாக சொல்கிறார்கள்.

திமுக மீது பல்வேறு அவதூறுகள் பரப்பி வருகின்றனர். எதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என கூறிய முதலமைச்சர், மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றினால் வெற்றி நிச்சயம். நியாயமான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும் என்றார்.

Views: - 188

0

0