திமுகவை போட்டுத் தாக்கிய துரை வைகோ!… திருச்சியில் மதிமுகவுக்கு தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 9:13 pm
Durai
Quick Share

திமுகவை போட்டுத் தாக்கிய துரை வைகோ!… திருச்சியில் மதிமுகவுக்கு தலைவலி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடைகளில் பேசும்போது மிகவும் உணர்ச்சி வசப்படுவார். அதன் எதிர் விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொந்தளிப்பார். தற்போது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவரால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதனால் மகன் துரை வைகோவை களம் இறக்கி விட்டிருக்கிறார்.

அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலினிடம் போராடி திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கேட்டு வாங்கி மகனை அங்கு வேட்பாளராகவும் நிறுத்திவிட்டார்.

அப்போது தனது கட்சியின் சின்னமான பம்பரத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்ற உத்தரவாதத்தையும் திமுக தலைமையிடம் அவர் பெற்றுக் கொண்டார். கட்சியின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சொந்த சின்னத்தில்தான் போட்டி என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதையும், இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏனென்றால் கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி திமுக சின்னத்தில்தான் நின்று வெற்றி பெற்றார். அதுபோல் இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதில் வைகோ மிகவும் கண்டிப்புடன் இருந்தார். ஆனால் இந்த சின்னம் பிரச்சினைதான் மதிமுகவுக்கு இன்னும் ஒரு தலைவலியாகவே இருக்கிறது.

2004 ல் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் எல் கணேசன் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனால் அந்தத் தொகுதியை தங்களுக்கு ராசியானதாக கருதி திமுக தலைமையிடம் மதிமுக கேட்டு வாங்கியும் விட்டது.

உண்மையில் விருதுநகர் தொகுதியில்தான் மதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அந்த சீட்டை காங்கிரசும் கேட்டதால் வேறு வழியின்றி மல்லுக் கட்டி திருச்சியை வாங்கியது. இத்தனைக்கும் தற்போதைய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் திருச்சியில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை வைகோ கண்ணீர் விட்டு கதறும்படியான ஒரு நிகழ்வு அரங்கேறியது.

அதுவும் அமைச்சர்கள் கே என் நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் முன்னிலையில் இது நடந்ததுதான் வேதனையான ஒன்று. துரை வைகோ பேசும்போது திருச்சி தொகுதியை மதிமுக கேட்டு வாங்கியது திமுகவினருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையோ என்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்து இருந்தது. அவருடைய உருக்கமான பேச்சு இதுதான்.

“திருச்சி மண்ணில் திமுகவுக்கு சிவனும், சக்தியாக உள்ள அண்ணன் நேருவை சுத்தி சுத்தி வந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அண்ணன் முகம் இறுக்கமாக உள்ளது. தனியாக பேசும்போதுகூட உங்கள் மகன் அருண் நேரு போல் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டேன். 

நான் அரசியல்வாதி கிடையாது; அரசியலுக்கு வருவேன் என்று கனவில் கூட எதிர்பார்த்ததும் இல்லை. முதுமை, மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதுதான்.  
4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அரசியலுக்கு வந்தேன். எனது கட்சிக்காரர்கள் என்னை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து அரசியலில் விட்டார்கள்.

இவ்வாறு மேடையில் அவர் கூறியபோது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் எந்த சின்னத்தில் போட்டியிட போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். மேலும் உங்களுக்குத்தான் பம்பரம் சின்னம் இன்னும் கிடைக்கவில்லையே பேசாமல் திமுக சின்னத்திலேயே போட்டியிடலாமே என்றும் அட்வைஸ் செய்தனர். இதைக் கேட்டு துரை வைகோ அதிர்ச்சி அடைந்தார்.

“கட்சிக்காக எனக்கு விருப்பம் இல்லாமல் நிற்கிறேன்; அப்பா 30 வருஷம் உழைத்து தேய்ந்துவிட்டார். அவர் ஒரு சகாப்தம். செத்தாலும் எங்களுக்கு தனி சின்னம்தான்,
நான் சுயமரியாதைக்காரன்.

அறிஞர் அண்ணாவின் கட்சி திமுக, டாக்டர் கலைஞர் கட்சி திமுக, எங்கள் அப்பாவும் திமுகவில்தான் இருந்தார், இதே உதயசூரியன் சின்னத்தில்தான் எங்கள் அப்பாவும் போட்டியிட்டார், திமுக சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களால் எங்கள் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சின்னத்தில் நிற்க முடியாது. 

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு மதவாத சக்திகள் காலூன்ற நினைக்கின்றன. இந்த நேரத்தில் மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள். நாங்கள் சிறிய கட்சி தான். இந்த தேர்தலில் கூட எனக்காக நான் சீட் கேட்கவில்லை என் கட்சியில் இருக்கக்கூடிய சில நபர்களுக்காக கேட்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தாலும் கூட நாங்கள் உங்களுடன் இணைந்துதான் பயணித்திருப்போம்.
40 தொகுதியிலும் வேலை பார்க்கிறோம். திமுக அணி வெற்றி பெற உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம்” என்று ஆவேசப்பட்டார்.

திமுக அமைச்சர்கள் மூன்று பேர் முன்னிலையில், திடுக்கிட வைக்கும் விதமாக பேசியதும், அதுவும் நீங்கள் டென்ஷன் ஆகாதீர்கள் என்று துரை வைகோவை அமைதிப்படுத்த திமுக நிர்வாகிகள் சிலர் முயன்றும் அது எந்த பலனையும் கொடுக்கவில்லை. தனது மனக்குமுறலை அவர் முழுமையாக கொட்டி தீர்த்து விட்டார்.

அவர் இப்படி வெளிப்படையாக, பேசியதற்கு அரசியல் பார்வையாளர்கள் பின்னணி காரணங்களாக பலவற்றை கூறுகின்றனர்.

“அமைச்சர் கே என் நேரு தனது மகன் அருணுக்காக முதலில் திருச்சி தொகுதியைதான் அறிவாலயத்திடம் கேட்டிருந்தார். ஏனென்றால் தனது வாரிசை மிகுந்த செல்வாக்குள்ள திருச்சியில் நிறுத்தினால் எளிதில் வெற்றி பெற வைத்து விடலாம் என்பது அவருடைய கணக்காக இருந்தது. ஆனால் மதிமுக அடம் பிடித்து இந்த தொகுதியை தட்டிப்பறித்து விட்டது.

இதனால் அருண் நேரு பெரம்பலூருக்கு தள்ளிவிடப்பட்டார். அங்கு பாஜக கூட்டணியில் பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார் என்பதை அறிந்ததும் அமைச்சர் கே என் நேரு அதிர்ந்துதான் போனார், என்கிறார்கள். ஏனென்றால் பாரிவேந்தருடன் மோதினால் இழுபறி நிலை ஏற்படலாம் அல்லது மகனுக்கு தோல்வி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று திமுகவினரே தெரிவித்ததாக கூறப்படுவதுதான் அவரை இன்னும் தூக்கிவாரிப் போட்டது.

இதனால் மகனுக்கு எப்படியாவது திருச்சி தொகுதியை வாங்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுக்குத்தான் பம்பரம் சின்னம் இன்னும் கிடைக்கவில்லையே என்று திமுக நிர்வாகிகள் துரை வைகோவை என்று கேலி பேசியதாகவே கருதத்தோன்றுகிறது.

டிவி செய்திச் சேனல்களும், சமூக ஊடகங்களும் கோலோச்சும் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப காலத்தில் எந்தவொரு கட்சியின் சின்னத்தையும் அதை தேர்தல் ஆணையத்தில் பெற்ற அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விட முடியும்…அப்படி இருக்கும்போது உங்களுக்கு இன்னும் சின்னம் கிடைக்கவில்லையே என்று திமுக நிர்வாகிகள் பேசியதன் உள் நோக்கம் வேறு என்பதை துரை வைகோ சட்டென்று புரிந்து கொண்டதாகவும் அத்துடன் தன்னை தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக சூழ்ச்சி வலை பின்னப்படுவதாகவும் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதுதான் கடும் கோபமாக மாறி அவருடைய கொந்தளிப்பான பேச்சில் வெளிப்பட்டது. நீங்கள் எனக்கு சீட் கொடுக்க விட்டாலும் கூட பரவாயில்லை மதிமுக உங்களுக்காக 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் என்று கண்ணீர் மல்க உறுதி கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே சில சலசலப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கொந்தளித்தது திமுக தலைமைக்கு மட்டுமல்ல, மதிமுகவுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அவருடைய வேதனையை புரிந்துகொண்ட திமுக தலைமை உடனடியாக தலையிட்டு அதை தணித்து விட்டதாகவே தெரிகிறது.

இதனால்தான் முதல் நாள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு துரை வைகோ மார்ச் 25ம் தேதியான இன்று தனது வேட்பு மனுவை திருச்சியில் தாக்கல் செய்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.

என்றபோதிலும் இனி தமிழகம் முழுவதும் திமுக, மதிமுகவினர்
ஒரு மனதுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவார்களா? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற விரக்தியால் தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தி எம்பி விவகாரத்துக்கு இணையாக துரை வைகோ கண்ணீர் விட்ட இந்த சம்பவமும் பார்க்கப்படுகிறது.

இந்த மனக்கசப்புகளையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்துவிட்டு திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவுக்கு நேரடியாக களத்தில் இறங்கும் போது
இன்னும் பல சவால்கள் காத்திருப்பதாகவே தோன்றுகிறது.

Views: - 268

0

0