EPS வசமான இரட்டை இலை … OPSக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்… அதிமுகவுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

Author: Babu Lakshmanan
27 March 2024, 9:30 pm
Quick Share

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?…கிடைக்காதா?… அல்லது சின்னம் முடக்கப்படுமா? என்ற கேள்விகள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

இதற்குக் காரணம் ஓபிஎஸ், பெங்களூரு புகழேந்தி, ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி, கே சி பழனிசாமி என்று சுமார் அரை டஜன் பேர் வரிசை கட்டி சென்னை உயர்நீதிமன்றம்,டெல்லி உயர்நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையம் என மாறி மாறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ந்து மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இது அதிமுகவுக்கு பெரும் குடைச்சல் தருவதாகவும் அமைந்தது.

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்னும் ஒரு படி மேலே போய் “நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவில் இன்றும் ஒருங்கிணைப்பாளர் பதவி அப்படியேதான் உள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதை பரிசீலித்து தேர்தல் ஆணையம் இரட்டை இலையை எங்களுக்கே ஒதுக்கும்” என்று தொடர்ந்து கூறி வந்தார்.

அவருடைய ஆதரவாளரான புகழேந்தி “இன்னும் இரண்டு நாள் மட்டும் பொறுத்திருங்கள். எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாகத்தான் முடிவை அறிவிக்கும் அல்லது இரட்டை இலை சின்னத்தை முடக்கும்” என்று பீதியை கிளப்பினார். ஓரிரு நாளில் இரட்டை இலை சின்னம் எங்கள் கைகளுக்கு வந்து விடும் என்றும் அள்ளிவிட்டார்.

அதுவும் கடந்த ஒரு வாரமாக தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி தருவது போல ஓபிஎஸ்ஸும், புகழேந்தியும் அவசர மனுக்களை தட்டி விட்டுக்கொண்டே இருந்தனர்.

எக்காரணம் கொண்டும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது.
அதை அப்படியே முடக்கவேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்பு
கடைசியாக வைத்த கோரிக்கையை ஓபிஎஸ் தனது பிரம்மாஸ்திரமாகவே கருதினார். இதனால் தேர்தல் களத்தில் பரபரப்பு எகிறியது.

அதேபோல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களும்,
சில டிவி செய்தி சேனல் நெறியாளர்களும் புதுப் புது கோணத்தில் இந்த விவகாரத்தை அலசி ஆராய்ந்து, ஆம் ஓபிஎஸ் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அதைத் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டால் இரட்டை இலையை அவருக்கே ஒதுக்கும், அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு கட்சியும் அவர் வசம் வந்துவிடும் என்றும் வாதங்களை முன் வைத்தனர்.

ஆனால் இவர்கள் பயம் காட்டி அளவிற்கு அப்படி எதுவும் நடந்து விடவில்லை. மாறாக, “தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றுதான் உள்ளது. எனவே அதிமுக வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை” என்று சின்னத்தை முடக்கக் கோரியவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு பெரிய முற்றுப்புள்ளியும் வைத்து விட்டது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த ஓபிஎஸ்க்கும், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே சி டி பிரபாகர் ஆகியோருக்கும் பெரும் பின்னடைவு என்றே சொல்லவேண்டும்.

அதேநேரம் தேர்தல் ஆணையம் இப்படி அறிவித்ததில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டது.

தவிர கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மூன்று தொகுதிகளில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவும் செய்தது. ஏனென்றால் 2023 மார்ச் மாத இறுதியில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு இரட்டை இலையில் போட்டியிட இந்த அனுமதியை வழங்கியது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் 2022 ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று தீர்ப்பளித்ததையும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையும் தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான் அது நடைமுறைக்கே வந்தது.

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரிக்கும் விதமாக அக்கட்சியின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை” என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கின் விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை பற்றி நினைத்துப் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதால் சிவில் வழக்கிலும் ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த வழக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரைப் பின் தொடர்வார்களா?…அல்லது இனி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் திமுகவுக்கு எதிரான வலிமையான ஒரே கட்சியாக திகழும் என்று கருதி இப்போதே அவர் பக்கம் சாய்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை மறுக்க முடியாது.

அதேபோல அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைப்பை ஓபிஎஸ் தொடர்ந்து நடத்துவாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தித்திப்பான இனிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு அவர் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது என்பதால் தனது வலிமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது.

இத் தேர்தலில் அதிமுக குறைந்தபட்சம் 5 முதல் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் 2026 தமிழகத் தேர்தலில் அவரால் திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும். அல்லது அதிமுக கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளில் 32 இடங்கள் வரை 30 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடிக்கவேண்டும். இதற்கான வாய்ப்பு அதிமுகவுக்கு பிரகாசமாக இருப்பதாக சுமந்த் சி ராமன் போன்ற அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல முடியும் என்றாலும் கூட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றமே செய்துள்ளது. எனவே இப்பிரச்சினையை உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.

இதனால் ஓபிஎஸ்சும், அவருடைய ஆதரவாளர்களும் எதிர்கால அரசியலுக்காக பாஜக அல்லது டிடிவி தினகரனின் அமமுகவை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கக்கூடிய நெருக்கடியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

Views: - 108

0

0