பொறுத்திருந்து பாருங்க… திமுகவால் அழியும் அதன் கூட்டணி கட்சிகள் ; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 1:00 pm
Quick Share

நெல்லை : தலை வைத்து படுத்து தூங்கும் அளவுக்கு பக்கம் பக்கமாக வாக்குறுதிகளை அளித்த திமுக, அதில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். 484 கோடி மதிப்புள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவேரியில் இருந்து தனியாக கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெற்று, சோதனையுடன் நடத்தி முடிக்கப்பட்டு, திறக்கும் தருவாயில் இருந்தும், 21 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கொடுக்காத அரசாக திமுக அரசு உள்ளது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையை இந்த அரசு வழங்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது, ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்த நிலையில், தற்போது எக்டேருக்கு 20,000 மட்டுமே வழங்கியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு என தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் ஈரோடு மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். தலையில் வைத்து படுத்து தூங்கும் வகையில் 520 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டு முக்கிய திட்டங்கள் எதனையும் இதுவரை செயல்படுத்தவில்லை. மகளிருக்கான உரிமை தொகை ரூபாய் 1000, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் உள்ளிட்டவைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

விடியா திமுக அரசால் மக்கள் இருவர் தினந்தோறும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். பல கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக இருப்பதோடு தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருந்தாலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும். திமுக உடனான கூட்டணி கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகிறது. திமுக மட்டுமே அந்த கூட்டணியில் வளர்ந்து வருகிறது.

திமுகவில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். விரைவில் அந்த கட்சிகள் காணாமல் போய்விடும். மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு திமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறில்லை. எழுதாத பேனாவை 80 கோடி செலவில் கடலில் வைப்பதை தவிர்த்துவிட்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு கோடி ரூபாய்க்கு பேனாவை நினைவு வைத்துவிட்டு மீதமுள்ள 79 கோடி ரூபாய் பணத்தில் மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனாவை வழங்கலாம்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும், என தெரிவித்தார்.

Views: - 277

0

0