எங்கு திரும்பினாலும் போராட்டம்… களத்தில் குதித்த எடப்பாடியார்… வாய் திறப்பாரா முதலமைச்சர்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!

Author: Babu Lakshmanan
3 October 2023, 4:54 pm
Quick Share

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை மாநாடு எப்போதும் போல சம்பிரதாயக் கூட்டமாக நடந்து முடிந்து விடுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- இன்றைக்கு நாடெங்கும் கிராமங்கள் தோறும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆங்காங்கே காலி குடங்களோடு, மக்கள் போராடுகிற ஒரு அவலநிலை இன்றைக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பினாலே மக்கள் வேதனையில் இருக்கின்றார்கள். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறிவிட்டது.

ஒரு புறத்திலே கருகும் பயிரை பார்த்து விவசாயிகள் உயிரை விட்டு கொண்டு இருக்கின்றார்கள். மறுபுறம் விவசாயிகள் ரயில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஆசிரியர்கள் போராட்டம் என்று இப்படி தமிழகம் முழுவதும் போராட்ட களமாக உள்ளது.

இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளோடு நீங்கள் நடத்துகிற இந்த கூட்டத்திலே, நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அவல நிலையை உண்மையிலேயே நீங்கள் விவாதித்து, அதற்கு தீர்வு காண நீங்கள் முயற்சி எடுப்பீர்களா? அல்லது எப்போதும் போல இதுவும் ஒரு கடமைக்கான சம்பிரதாய கூட்டமாக நடைபெறுகிறதா என்பது தான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோதும் சரி,  எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோதும் சரி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாடுகளில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக வளர்ச்சி திட்டங்களுடைய நிலுவை பணிகள், ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர், மருத்துவ வசதி, கல்வி  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வை மேற்கொண்டார்கள். 

எடப்பாடியார் சாமானிய முதல்வராக சாமானிய மக்களின் பிரச்சனைகளை அக்கறையோடு விசாரித்து ஆய்வு செய்து, அதற்கு தீர்வு கண்டு, அதன் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி சென்றதை இந்த தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. அதனால் தான் மீண்டும் வேண்டும் எங்களுக்கு எடப்பாடியார் என்று இந்த தாய்நாட்டு மக்கள் இன்றைக்கு எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே, எப்போதும் போல நீங்கள் நடத்துகிற விழாவை போல இது ஒரு சம்பிரதாயக் கூட்டமாக, இது நடந்து முடிந்து விடுமா அல்லது உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமா? உரிமைத்தொகையிலேயே குளறுபடியை தீர்வு காண்பதற்கு நீங்கள் முன் வருவீர்களா? 

விவசாயிகளின் காவிரி உரிமையை நிலைநாட்டுவதற்காக  உயிர் பிரச்சனைக்கு இந்த கூட்டத்திலே ஏதேனும் முக்கிய முடிவுகளை இங்கே எடுப்பதற்கு, கர்நாடகாவில் பேசி அந்த உரிமையை பெற்று தருவதற்கு இனிமேலாவது இந்த கூட்டத்தில் வாய் திறப்பாரா முதலமைச்சர் என்று? விவசாயிகள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். 

ஆகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போராட்டக் களமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் பற்றாக்குறை, டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுகிற வேதனையான செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆகவே, இன்றைய நடைபெறுகிற இந்த மாநாட்டிலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்? 

வளர்ச்சித் திட்டங்களை கையில் எடுப்பரா? காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதனை தொடர்ந்து, கர்நாடக அரசை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் எடப்பாடியார் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலமாக, தமிழர்கள் இன்றைக்கு போராட்ட களமாக மாறிவிட்டது. இது குறித்து கர்நாடகாவில் இருந்து தண்ணீரை கொண்டுவர இந்த மாநாட்டில் தீர்வு காண்பாரா?

அல்லது சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்வாரா? அல்லது மானிய கோரிக்கைகளை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிணத்தில் போட்ட கல்லாக இருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்வாரா? எல்லாவற்றுக்கும் மேலாக 520 தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் முயற்சி செய்வாரா?

மக்களிடத்திலும் வரவேற்பை பெற்று இருக்கிற திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மடிக்கணிணி திட்டம், இருசக்கர வாகன திட்டம், குடிமராமத் திட்டம், நதிநீர் இணைப்பு திட்டம், அத்தனை திட்டங்களையும் கிடப்பில் போட்டிருக்கிறீர்களே, அதை மீண்டும்  செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வீர்களா?, 

ஆகவே இந்த நடைபெறுகிற மாவட்ட ஆட்சியர் மாநாடு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாநாடு, உண்மையிலேயே மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் நடைபெறும் கூட்டமா அல்லது சம்பிரதாய கூட்டமாக  இருக்குமா என்று தமிழக மக்களின் கேள்விக்கு விடை காணுவாக முன் வருவாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Views: - 307

0

0