எனக்கு முதல்ல வாழ உரிமை கொடுங்க… தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் மாஜி மனைவி பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2023, 2:32 pm
Velmurugan - Updatenews360
Quick Share

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான பண்ருட்டி வேல்முருகன் தனது மனைவி காயத்ரியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இடையேயான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவர்களுக்கு 2018ல் விவாகரத்து கிடைத்துவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி வேல்முருகன் இழப்பீடு தரவில்லை என்று கூறி காயத்ரி நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கில் எம்எல்ஏ பண்ருட்டி வேல்முருகன், காயத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு குறித்து வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்னை கல்யாணம் செய்த போது, எங்க அப்பா தான் சாப்பாட்டிற்கு காசு கொடுத்தார். இன்னைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கு என்று கையை விரித்து காட்டுகிறார் ஆனால் பணம் தர மாட்டேன் என்கிறார். நியாயமாக கொடுக்க வேண்டியதை கொடுக்கலாம் இல்லையா? இவரு வந்து மக்களுக்கு நீதி நியாயம்னு பேசுறாரு.. இவருவந்து தமிழகத்துக்கு வாழ்வுரிமை கொடுப்பாராம்.

அதனால் தான் அந்த கட்சி பேரு தமிழக வாழ்வுரிமை கட்சியாம். மனைவியா கட்டிக்கிட்ட எனக்கு வாழ உரிமை கொடுக்க சொல்லுங்க.. வளசரவாக்கத்துல என் பெயர்ல என் அப்பா வாங்கி கொடுத்த வீடு இருக்கு. அதை வந்து அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கிட்டு இருக்காரு. இவர் ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால், என்னால் ஒன்றுமே பண்ண முடியவில்லை. என்னால் அந்த பக்கம் போக முடியவில்லை. வருமானம் ரீதியாக நான் ரொம்ப கஷ்டப்படுறேன்.

அவருடன் 20 வருசம் வாழ்ந்துட்டேன். வெளியே வந்து படிச்சிருந்தாலோ, இல்லை வேறு யாராவது திருமணம் செய்திருந்தாலோ, என் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கும். நல்லபடியாக இருந்திருக்கும். இப்ப என் வாழ்க்கையே போச்சு.. என்னுடன் வாழ்ந்ததற்கு உரிய நிவாரணமோ, நியாயமோ எனக்கு அவர் இதுவரை வழங்கவில்லை.

எங்களுக்கு 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். எங்கள் விவாகரத்து வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு கிடைச்சது. மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்டு உத்தரவு போட்டிருக்கு. இதுவரை அவர் இழப்பீடு கொடுக்கவில்லை. அதற்காகத்தான் கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன். வளசரவாக்கத்தில் எனது பெயரில் உள்ள வீட்டை வேல்முருகன் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்.அந்த வீட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” இவ்வாறு கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் எதனால் இழப்பீடு தரமறுக்கிறார் என்று கேட்டனர். அதற்கு காயத்ரி கூறும் போது, வெறும் எம்எல்ஏ என்பதால் தன்னால் முடியாது என்று வேல்முருகன் கூறுகிறார். அவர் தற்போது 3வது முறை எம்எல்ஏ, அவர் என்னை கல்யாணம் செய்யும் போது, நாங்கள் தான் சாப்பாட்டுக்கு காசு கொடுத்தோம். இன்று அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை விசாரித்தாலே தெரியும். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கிறது. அவரது அண்ணன் தம்பி பெயரிலும் சொத்துக்கள் இருக்கிறது. ஆனாலும் இழப்பீடு தர மறுக்கிறார் என்று காயத்ரி குற்றம்சாட்டினார்.

Views: - 435

0

0