நெல்லையை தொடர்ந்து கடலூர்… ராஜினாமா செய்ய திமுக கவுன்சிலர்கள் தயார் : தலைமைக்கு புதிய தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 8:26 pm
Cuddalore
Quick Share

நெல்லையை தொடர்ந்து கடலூர்… ராஜினாமா செய்ய திமுக கவுன்சிலர்கள் தயார் : தலைமைக்கு புதிய தலைவலி!

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் பழக்கடை ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்தது தலைமை. இதனால் கடுப்பான மற்றொரு தரப்பு கவுன்சிலர்கள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல் குணசேகரனின் மனைவி கீதாவுக்கு ஆதரவு கொடுத்தனர். கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனின் ஆதரவுடன் கீதாவை மேயர் வேட்பாளராக களமிறக்க முயன்றனர்.

கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, போட்டி வேட்பாளரை நிறுத்திய திமுக எம்.எல்.ஏ அய்யப்பனை கட்சித் தலைமை சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு அய்யப்பனை மீண்டும் கட்சித் தலைமை சேர்த்துக்கொண்டாலும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மேயர் தரப்பு, அய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், கடலூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சியில் ஒவ்வொரு மாமன்ற கூட்டம் நடைபெறும்போதும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்து கோஷம் எழுப்புவதும், வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி அய்யப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு மாநகராட்சி ஆணையர் காந்திராஜை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் வரும், 31ஆம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும், தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், துறை அமைச்சர், கட்சி மேலிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தங்களது அடையாள அட்டைகளை ஒப்படைத்து மாமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அவர்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜினாமா செய்வோம் என ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நெல்லையில் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கோரிய நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைத்தார். இந்நிலையில், கடலூர் மாநகராட்சியில் திமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 185

0

0