பொதுமக்களுக்கு ஒரு விதி.. அதிகாரிகளுக்கு ஒரு விதியா..? முதலமைச்சர் கான்வாயில் ஃபுட் போர்டு அடித்த விவகாரம் ; மேயர் பிரியா மீது போலீசில் புகார்

Author: Babu Lakshmanan
12 December 2022, 1:40 pm
Quick Share

முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி வெள்ளிக்கிழமை இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணிகளின் போது அமைச்சர் சேகர் பாபு, கேஎன் நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி உள்ளிட்டோரும் இருந்தனர்.

ஆய்வின் போது முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதான் பெண்களுக்கான சமூக நீதியா..? என்று எல்லாம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதேவேளையில், மேயரின் செயலை துணிச்சலாக பார்க்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், பேருந்தில் ஃபுட் போர்டு அடிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மேயர் பிரியாவின் செயல் சரியானதா..? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு ஒரு விதி..? அரசு அதிகாரிகளுக்கு ஒரு விதியாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனு மீது போலீசார் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள்..? என்பது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் தெரிய வரும்.

Views: - 296

0

0