திறனற்ற திமுக ஆட்சியில் அழிவை நோக்கி மருத்துவத்துறை… அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு… அண்ணாமலை கடும் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 11:43 am
Quick Share

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியா. கால்பந்து விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.

அண்மையில் பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து.

இதனை தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் மகளின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையுமே காரணம் என்றும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 316

0

0