விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க திமுகவை ஜெயிக்க யாராலும் முடியாது : அதிமுக எம்பி சி.வி. சண்முகம் விமர்சனம்!

Author: Babu Lakshmanan
13 September 2022, 3:58 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போடப்பட்டு, சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம்.

ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற முக.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார்.

இன்றைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திறன் இல்லாத திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. 105 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து எடப்பாடி அரசு ஆட்சி நடத்தினார்கள். ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மக்களை, மீண்டும் இந்த அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பால் விலை, கட்டுமான பொருள், சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை இன்றைக்கு வஞ்சித்திருக்கிறார். பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து பஸ் கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும். இது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக முதலமைச்சர் தர இருக்கிறார். அரசாங்கம் அமைத்துள்ள அனைத்து அமைப்புகளையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற வகையில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் இன்றைக்கு கொள்ளையடித்து பட்டா போட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் மீது வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஒரு மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தது முறையாக கொடுக்கவில்லை என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை. வெறும் தடையில்லா சான்று மட்டும் தான் மாநில அரசாங்கம் கொடுக்கின்ற கடமை. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தான் ஆய்வு செய்து முறையான அனுமதி கொடுக்கும். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இந்த வழக்கில் சேர்த்து உள்ளார்களா..?

உங்கள் அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட தடையில்லா சான்று வழங்கியதற்காக உங்களுடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா..? உங்கள் அமைச்சர்களுக்கு எந்த நடைமுறையில் சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதே நடைமுறையில் தான் இவர்களுக்கும் சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் சேர்த்தீர்களா..?

இந்த அரசு தேவையில்லாத காழ்புணர்ச்சியில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு உங்கள் ஆட்சி மீது ஏற்பட்டிருக்கிற கோபத்தை திசை திருப்பதற்காக, இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள், என்றும் ஆவேசமாக கூறினார்.

முன்னதாக, லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்த சி.வி சண்முகம் உள்ளே சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

Views: - 336

0

0